பாகிஸ்தானில் இந்துக்கள் துன்புறுத்தப்படுவதை தடுக்க இங்கிலாந்து அரசு தலையிட வேண்டும்’; பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு இந்து அமைப்புகள் கடிதம்


பாகிஸ்தானில் இந்துக்கள் துன்புறுத்தப்படுவதை தடுக்க இங்கிலாந்து அரசு தலையிட வேண்டும்’; பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு இந்து அமைப்புகள் கடிதம்
x
தினத்தந்தி 11 Jan 2021 8:26 PM GMT (Updated: 11 Jan 2021 8:26 PM GMT)

பாகிஸ்தானில் இந்துக்கள் துன்புறுத்தப்படுவதை தடுக்க இங்கிலாந்து அரசு தலையிட வேண்டும்’ என பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு இந்து அமைப்புகள் கடிதம் எழுதியுள்ளன.

லண்டன், 

பாகிஸ்தானில் இந்துக்கள் சிறுபான்மை மக்களாக இருந்து வருகின்றனர். இந்த சூழலில் சமீபகாலமாக பாகிஸ்தானில் இந்து மக்கள் மீது வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டு வருகிறது. கடந்த மாதம் கைபர் பக்துங்வா மாகாணத்தில் உள்ள இந்து கோவில் ஒன்று இடித்து தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் பாகிஸ்தானில் சிறுபான்மை மக்கள் துன்புறுத்தப்படுவதை தடுத்து நிறுத்த பாகிஸ்தான் அரசை இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வலியுறுத்த வேண்டுமென இங்கிலாந்தில் உள்ள இந்து அமைப்புகள் அவருக்கு கடிதம் எழுதியுள்ளன‌.

இங்கிலாந்தில் செயல்பட்டு வரும் பல்வேறு இந்து அமைப்புகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து போரிஸ் ஜான்சனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ‘‘பாகிஸ்தானில் இந்துக்கள் பரவலாக துன்புறுத்தப்படுவதை தடுக்க பாகிஸ்தான் பிரதமர் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும் என்பதை இங்கிலாந்து அரசு வலியுறுத்த வேண்டும். இதை அவசர நடவடிக்கையாக எடுக்க விரும்புகிறோம். சமீப காலங்களில் பாகிஸ்தானில் இந்துக்களின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது’’ என தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர்கள் ‘‘இந்த விவகாரத்தில் இங்கிலாந்து அரசு ஒரு விசாரணை கமிட்டியை அமைக்கவும், ஐ.நா. சபை வழியாக உலகெங்கிலும் உள்ள நல்ல ஜனநாயக நாடுகளையும் இதேபோல் விசாரணை கமிட்டிகளை அமைப்பதற்கு வலியுறுத்தவும் நாங்கள் உங்களை கேட்கிறோம். பாகிஸ்தானில் இனப்படுகொலை மற்றும் சிறுபான்மையினர் துன்புறுத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும்’’ என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

Next Story