அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை பதவி நீக்கும் தீர்மானம் நள்ளிரவில், வாக்கெடுப்புக்கு வருகிறது சொந்த கட்சியிலேயே எம்.பிக்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
வாஷிங்டன்
அமெரிக்க ஜனாதிபதி பதவிக்காலம் முடிவடைய இன்னும் 8 நாட்களே எஞ்சியிருக்கும் நிலையில், டொனல்டு டிரம்பை பதவி நீக்க கோரும் தீர்மானம், இந்திய நேரப்படி, இன்று நள்ளிரவில், வாக்கெடுப்புக்கு வருகிறது. குடியரசு கட்சியினரே டிரம்புக்கு எதிராக வரிந்து கட்டுவதால், பதவி நீக்க கோரும் தீர்மானம் எளிதாக நிறைவேறும் எனக் கூறப்படுகிறது.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் தேர்தலில் வெற்றி பெற்றதை அமெரிக்க காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த ஜனவரி 6-ஆம் தேதி ஆயிரக்கணக்கான டிரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்ற வளாகத்தை முற்றுகையிட்டு பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமனறத்தின் உள்ளே வரை சென்று நடத்தப்பட்ட இந்த வரலாற்றுமிக்க கலவரத்தில் ஒரு கேபிடல் போலீஸ் அதிகாரி உட்பட 5 பேர் உயிரிழந்தனர். மேலும் கேபிடல் அலுவலகங்கள் முழுவதும் சேதப்படுத்தப்பட்டது. இந்த சம்பவத்துக்கு பிரதமர் மோடி உள்பட உலக தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை பதவி நீக்க கோரிக்கை வலுத்தது. இதனைத் தொடர்ந்து, அமெரிக்க அரசியலமைப்பின் 25ஆவது சட்டப்பிரிவை பயன்படுத்தி, கேபினட் ஒப்புதலை பெற்று, டிரம்பை பதவியிலிருந்து நீக்க துணை ஜனாதொபதி மைக் பென்ஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஜனநாயக கட்சி வலியுறுத்தியது. மேலும், இதன்மீது, துணை ஜனாதிபதி முடிவெடுக்க வலியுறுத்தும் தீர்மானம், மக்கள் பிரதிநிதிகள் அவையில், 223க்கு 205 என்ற பெரும்பான்மை வாக்குகளோடு, செவ்வாய்கிழமைன்று வெற்றிகரமாக நிறைவேறியது.
இருப்பினும், டிரம்ப்க்கு எதிராக, பதவி நீக்கத் தீர்மானத்தை கொண்டுவர, துணை ஜனாதிபதி மைக் பென்ஸ்மறுத்துவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவையின் சபாநாயகர் நான்சி பெலோசி ஜனாதிபதி பதவியிலிருந்து டிரம்பை பதவி நீக்க கோரும் தீர்மானத்தை முன்மொழிந்துள்ளார். ஜனநாயக கட்சியினர் பெரும்பான்மையாக உள்ள, அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவையில், இந்திய நேரப்படி, இன்று நள்ளிரவில் வாக்கெடுப்புக்கு வருகிறது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பதவிக்காலம் முடிய இன்னும் ஒரு வாரமே உள்ளது. ஆனால், அதற்குள் அவரைப் பதவி நீக்கிவிடவேண்டும் என்று ஜனநாயக கட்சியினர் மேற்கொண்டுவரும் முயற்சிக்கு டிரம்பின் சொந்தக் கட்சியான, குடியரசு கட்சியிலேயே சிலர் ஆதரவு தெரிவிப்பதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
முன்னாள் துணை ஜனாதிபதி டிக் செனீயின் மகளும், மூத்த குடியரசுக் கட்சி உறுப்பினரான லிஸ் செனீ , ஜான் காட்கோ, ஆடம் கின்சிங்கர், பிரட் அப்டான் உள்ளிட்ட குடியரசு கட்சி எம்.பிக்கள், டிரம்பை பதவி நீக்க கோரும் தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்கப் போவதாக கூறியிருக்கின்றனர்.
பதவி நீக்க கோரும் தீர்மானம் நிறைவேறினால், அமெரிக்க நாடாளுமன்ற மேலவையான, செனட் சபையில், டொனல்ட் டிரம்ப் மீது விசாரணை நடைபெறும்.
செனட்டில் டிரம்ப் மீதான குற்றத்தை உறுதி செய்ய மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை ஆகும். இதனால், குறைந்தது 17 குடியரசுக் கட்சியினர் டிரம்புக்கு எதிராக வாக்களிக்கவேண்டும். ஆனால், 20 பேர் தயாராக இருப்பதாக, நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
கொரோனா கிருமி தொடா்ந்து உருமாறிக்கொண்டே இருக்கும், அதை எதிா்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும் என அமெரிக்காவின் மருத்துவத் துறை தலைவர் விவேக் மூா்த்தி கூறி உள்ளார்.