பறவைக்காய்ச்சல் எதிரொலி: இந்தியாவில் இருந்து கோழி, முட்டை இறக்குமதிக்கு வங்காளதேசம் தடை


பறவைக்காய்ச்சல் எதிரொலி:  இந்தியாவில் இருந்து கோழி, முட்டை இறக்குமதிக்கு வங்காளதேசம் தடை
x
தினத்தந்தி 15 Jan 2021 10:52 PM GMT (Updated: 15 Jan 2021 10:52 PM GMT)

பறவைக்காய்ச்சல் எதிரொலியாக இந்தியாவில் இருந்து கோழி, முட்டை இறக்குமதிக்கு வங்காளதேசம் தடை விதித்துள்ளது.

டாக்கா,

இந்தியாவில் சில வாரங்களுக்கு முன், பறவைக்காய்ச்சல் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. கேரளா உள்ளிட்ட 10 மாநிலங்களில் இந்நோய் கடும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆயிரக்கணக்கில் கோழி, வாத்துகள் கொன்று அழிக்கப்பட்டிருக்கின்றன.

இந்நிலையில் அண்டை நாடான வங்காளதேசம், இந்தியாவில் இருந்து கோழி, முட்டை இறக்குமதிக்கு தடை விதித்துள்ளது.

இதுதொடர்பாக வங்காளதேச மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சக செயலாளர் ரானக் மெக்முத் கூறுகையில், ‘வங்காளதேசத்தில் இதுவரை பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்படவில்லை என்றாலும், முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பறவைக்காய்ச்சல் சரியாகும் வரை இத்தடை உத்தரவு அமலில் இருக்கும்’ என்றார்.

வங்காளதேசத்தில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் இருந்தாலும், அது கோழி இறைச்சி, முட்டைக்கு வெளிநாட்டு இறக்குமதியையே பெரிதும் சார்ந்திருக்கிறது. 80 சதவீத கோழி, முட்டை, வெளிநாடுகளில் இருந்து, குறிப்பாக இந்தியாவில் இருந்து வருகிறது.

வழக்கமான இறக்குமதி தவிர, இந்தியாவில் இருந்து வங்காளதேசத்துக்கு பறவையினங்கள் பெருமளவில் கடத்தப்படுவதாகவும் புகார் உள்ளது.

அதையும் தடுக்க எல்லை மாவட்ட நிர்வாகங்கள் கண்காணிப்பை தீவிரப்படுத்தும்படி வங்காளதேச அரசு உத்தரவிட்டுள்ளது.

Next Story