பதவி ஏற்க வாடகை விமானத்தில் வந்த ஜோ பைடன் டிரம்ப் விமானம் ஒதுக்கவில்லை


பதவி ஏற்க வாடகை விமானத்தில் வந்த ஜோ பைடன் டிரம்ப்  விமானம் ஒதுக்கவில்லை
x

அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்க உள்ள ஜோ பைடனுக்கு விமானம் ஒதுக்காத டொனால்டு டிரம்ப்

வாஷிங்டன்,

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக தேர்வானார்.

அமெரிக்க சட்டப்படி நவம்பர் மாதம் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறும் நபர் அடுத்த ஆண்டு ஜனவரி 20-ந்தேதி பதவி ஏற்பது வழக்கம்.

அந்த வகையில் அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று (புதன்கிழமை) பதவி ஏற்கிறார். அவருடன் தமிழகத்தை பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக பதவி ஏற்கிறார்.

பொதுவாகவே பதவியேற்பு நாளில் விரிவான பாதுகாப்பு திட்டங்கள் இருக்கும். அதுவும் கடந்த 6-ந்தேதி அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்துக்குள் நடைபெற்ற வன்முறைக்கு பிறகு பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்னும் தீவிரமாக்கப்பட்டுள்ளன.

ஜோ பைடன் பதவியேற்பு விழாவின்போது டிரம்ப் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபடலாம் என உளவுத்துறை எச்சரித்துள்ளதால் தலைநகர் வாஷிங்டனில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக வாஷிங்டன் முழுவதும் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.

பதவியேற்பு விழாவின் பாதுகாப்பு திட்டங்களுக்கான ஏற்பாடுகளை ரகசிய சேவை கையில் எடுத்துள்ளது. இதையொட்டி வாஷிங்டன் முழுவதும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேசிய பாதுகாப்பு வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தனக்குப் பின் அமெரிக்க ஜனாதிபதியாக  பதவியேற்க இருக்கும் ஜோ பைடனை வெளிப்படையாக டொனால்டு டிரம்ப் அவமதித்துள்ளார் .இன்று பதவியேற்புக்காக ஜோ பைடன் வாஷிங்டன் டி.சிக்கு வரவேண்டும். ஆனால், அவருக்கு டிரம்ப் அரசாங்க விமானத்தை ஒதுக்கவில்லை

ஆகவே, வேறு வழியில்லாமல், வாடகைக்கு தனியாக ஒரு விமானத்தை அமர்த்திக்கொண்டு பயணம் செய்துள்ளார் ஜோ பைடன். அத்துடன், ஜோ வாஷிங்டனில் கால் பதித்த நேரம், வெள்ளை மாளிகை டிரம்பின் பிரிவு உபச்சார வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில், மரியாதைக்குக்கூட ஜோ பைடனின் பெயரை உச்சரிக்கவோ, அடுத்து ஜனாதிபதியாக் பதவியேற்பதற்காக அவருக்கு வாழ்த்துச் சொல்லவோ கூட இல்லை டிரம்ப்.மேலும், ஜோ பைடனுக்கு வாழ்த்துச் சொல்லாமலே வாஷிங்டனை விட்டு வெளியேறவும் முடிவு செய்துள்ளது டிரம்ப் குடும்பம்!

நண்பகல் 12 மணியளவில் ஜோ பைடனும் கமலா ஹாரிசும் பதவி ஏற்றுக் கொள்வார்கள். ஜனாதிபதி ஜோ பைடனுக்கு அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவி பிரமாணம் செய்து வைப்பார். அதேபோல் துணை ஜனாதிபதி கமலா ஹாரிசுக்கு சுப்ரீம் கோர்ட்டு பெண் நீதிபதி சோனியா சோட்டோமேயர் பதவி பிரமாணம் செய்து வைப்பார்.

அதன்பின்னர் ஜோ பைடன் வெள்ளைமாளிகையில் குடி புகுவார். அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு அதுதான் அவரது வீடு.

ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிசின் பதவி ஏற்பு விழா, அமெரிக்காவின் முன்னணி செய்தி சேனல்கள் அனைத்திலும் நேரலையில் ஒளிபரப்பப்படும்.

இது தவிர ஜே பைடன் குழுவின் பேஸ்புக், டுவிட்டர் மற்றும் ‌யூடியூப் உள்ளிட்ட தளங்களிலும் பதவியேற்பு விழா நேரலை செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story