உலகளவில் 20.56 லட்சம் பேரை கொன்று குவித்தது, கொரோனா


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 20 Jan 2021 10:01 PM GMT (Updated: 20 Jan 2021 10:01 PM GMT)

உலகளவில் கொரோனா 20.56 லட்சம் பேரை கொன்று குவித்துள்ளது. 9.61 கோடி பேரை பாதித்தும் இருக்கிறது.

வாஷிங்டன், 

சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ், கடந்த ஓராண்டு காலத்தில் உலகமெங்கும் ருத்ரதாண்டவமாடி உள்ளது. அது, 191 நாடுகளில் 20 லட்சத்து 56 ஆயிரம் பேரை கொன்று குவித்துள்ளது. 9 கோடியே 61 லட்சம் பேரை பாதித்தும் இருக்கிறது என்ற புள்ளி விவரத்தை அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவு மையம் வெளியிட்டுள்ளது.

அதே நேரத்தில் கொரோனாவின் பிடியில் இருந்து 5 கோடியே 30 லட்சம்பேர் மீண்டும் இருக்கிறார்கள்.

பிற முக்கிய புள்ளிவிவரங்கள் இவை:-

* மிகவும் பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்கா. அங்கு 2.42 கோடி பேருக்கு அதிகமாக வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். 4 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா நோயாளிகள் இறந்துள்ளனர்.

* பிரேசில் நாட்டில் 85.73 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்களில் 2.11 லட்சம் பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

* ரஷியாவில் 35.74 லட்சம் பேருக்கு பாதித்து, 65 ஆயிரத்துக்கும் அதிகமானோர் மரணத்தை தழுவி உள்ளனர்.

* இங்கிலாந்தில் 34.76 லட்சம்பேரை கொரோனா தாக்கியதில், 91 ஆயிரத்துக்கும் அதிகமானோர் மரணம் அடைந்துள்ளனர்.

* துருக்கியில் 23.99 லட்சம் பேர் கொரோனா பிடியில் சிக்கி உள்ளனர்.

* ஸ்பெயினில் 23.36 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர்.

* ஜெர்மனியில் 20.59 லட்சம் பேரை கொரோனா தாக்கி, 47 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.

* கொலம்பியாவில் 19.23 லட்சம் பேர் கொரோனா பிடியில் சிக்கியதில், 49 ஆயிரத்துக்கும் கூடுதலானோர் உயிரிழந்திருக்கிறார்கள்.

இவ்வாறு அந்த புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

Next Story