இந்திய, அமெரிக்க உறவு மேலும் வலுப்பெறும்; வெள்ளை மாளிகை கருத்து


இந்திய, அமெரிக்க உறவு மேலும் வலுப்பெறும்; வெள்ளை மாளிகை கருத்து
x
தினத்தந்தி 22 Jan 2021 11:54 PM GMT (Updated: 22 Jan 2021 11:54 PM GMT)

துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிஸ், பொறுப்பு ஏற்றது இந்தியா, அமெரிக்கா இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துகிறது என்று வாஷிங்டன் வெள்ளை மாளிகை கூறி உள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்க நாட்டில் இந்திய வம்சாவளியை குறிப்பாக தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் துணை ஜனாதிபதியாகி புதிய சரித்திரங்களை படைத்துள்ளார். அவர்தான் அந்த நாட்டின் முதல் பெண் துணை ஜனாதிபதி, முதல் கருப்பர் இன துணை ஜனாதிபதி, முதல் ஆசிய-அமெரிக்க துணை ஜனாதிபதி, முதல் இந்திய வம்சாவளி துணை ஜனாதிபதி ஆவார். கடந்த 20-ந் தேதி அவர் துணை ஜனாதிபதியாக பதவி ஏற்றதை இந்தியா கொண்டாடியது.

இந்த தருணத்தில் வாஷிங்டன் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜென் சாகி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், “ஜோ பைடனின் புதிய நிர்வாகத்தில் இந்தியா, அமெரிக்கா இடையேயான உறவு எப்படி இருக்கும்?” என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளித்து கூறியதாவது:-அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இந்தியா-அமெரிக்கா இடையேயான வெற்றிகரமான நீண்ட கால உறவை மதிக்கிறார். அது தொடர்வதை அவர் எதிர்பார்க்கிறார்.

வெளிப்படையாக, ஜோ பைடன் தேர்ந்தெடுத்து, முதல் இந்திய-அமெரிக்க துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிஸ் பதவி ஏற்றுள்ளார். இது நம் எல்லோருக்கும் ஒரு வரலாற்று சிறப்புமிக்க தருணம். நிச்சயமாக துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிஸ், பொறுப்பு ஏற்றது இந்தியா, அமெரிக்கா இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

பதவி ஏற்பு விழாவையொட்டி நடந்த ஒரு நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் பேசியபோது, “என் கதை லட்சோப லட்சம் அமெரிக்கர்களின் கதை. எனது தாய் சியாமளா கோபாலன், இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு வந்தார். அவர் என் சகோதரரி மாயாவையும், என்னையும் வளர்த்தெடுத்தார். நாங்கள் எதிலும் முதலில் வரவேண்டும்; கடைசியில் வரக்கூடாது என்று கூறி இருக்கிறார். 

சான்பிரான்சிஸ்கோ நகரின் முதல் மாவட்ட பெண் அட்டார்னியாக, கலிபோர்னியா மாகாணத்தின் முதல் பெண் அட்டார்னி ஜெனரலாக, அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபையின் முதல் கருப்பின பெண் உறுப்பினராக, நான் மறைந்த எனது தாய் சியாமளா கோபாலனிடம் பெற்ற பாடத்தை, எப்போதும் என்னுடன் எடுத்துக்கொண்டு வந்துள்ளேன்” என நினைவுகூர்ந்தார்.மேலும், “அம்மா, நீங்கள் என் மீது தொடர்ந்து வைத்த நம்பிக்கை, என்னை வாழ்வில் இந்த தருணத்திற்கு அழைத்து வந்திருக்கிறது” என்றும் நெகிழ்ச்சியுடன் கூறினார்.


Next Story