அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்பு 6 லட்சத்தை எட்டும்: அதிபர் ஜோ பைடன்


அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்பு 6 லட்சத்தை எட்டும்: அதிபர் ஜோ பைடன்
x
தினத்தந்தி 23 Jan 2021 12:35 AM GMT (Updated: 23 Jan 2021 12:35 AM GMT)

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்பு எண்ணிக்கை 6 லட்சத்தை எட்டும் என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன், 

சீனாவின் உகான் நகரில் கடந்த 2019- ஆம் ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் வியாபித்துள்ளது.  கொரோனா பாதிப்பால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முதலிடம் வகிப்பது  உலக வல்லரசான அமெரிக்கா தான். 

அமெரிக்காவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2.5 கோடியை தாண்டியுள்ளது. உயிரிழப்பு 4.23 லட்சமாக உள்ளது. ஒரு பக்கம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்தாலும் மறுபுறம் தொற்று பாதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 

இந்த நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்பு 6 லட்சத்தை எட்டும் என்றார். அதேபோல், அமெரிக்காவில் இரண்டு  நிறைவேற்று  உத்தரவுகளையும்  ஜோ பைடன் பிறப்பித்துள்ளார். 

அதாவது அமெரிக்காவின் மத்திய பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் 15 டாலராக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், குறைந்த வருவாய் கொண்ட அமெரிக்கர்களுக்கு உணவு உதவி உள்பட பல்வேறு சலுகைகளையும் ஜோ பைடன் வழங்கும் நிறைவேற்று உத்தரவை பிறப்பித்துள்ளார்.


Next Story