அமெரிக்காவில் பொருளாதார நிவாரண தொகையை உயர்த்தி வழங்க அதிபர் ஜோ பைடன் உத்தரவு


அமெரிக்காவில் பொருளாதார நிவாரண தொகையை உயர்த்தி வழங்க அதிபர் ஜோ பைடன் உத்தரவு
x
தினத்தந்தி 23 Jan 2021 6:22 PM GMT (Updated: 23 Jan 2021 6:22 PM GMT)

அமெரிக்காவில் வழங்கப்பட்டு வரும் பொருளாதார நிவாரண தொகையை மூன்று மடங்கு உயர்த்தி வழங்க அதிபர் ஜோ பைடன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வாஷிங்டன்,

கடந்த 20 ஆம் தேதி அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவி ஏற்றார். அமெரிக்க ஜனாதிபதியாக வாஷிங்டன் வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் வந்து அமர்ந்த முதல் நாளிலேயே ஜோ பைடன் செயல்பட தொடங்கி விட்டார்.

ஒரே நாளில் அவர் அதிரடியாக 15 நிர்வாக உத்தரவுகளை பிறப்பித்தார். மேலும் அமெரிக்காவில் தற்போது மிகப்பெரும் பிரச்சினையாக உள்ள கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு உத்தரவுகளை அவர் பிறப்பித்து வருகிறார். அந்த வகையில் ஜோ பைடன் பிறப்பித்த முதல் உத்தரவு, 100 நாட்களுக்கு அமெரிக்கர்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். அமெரிக்காவின் மத்திய அரசு இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்பதாகும்.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் மீட்பு நடவடிக்கையாக வேலையிழந்தவர்கள், குடியிருப்புகளை விட்டு வெளியேற்றப்பட்டவர்கள் உள்ளிட்டோருக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகையை தற்போது 600 டாலர்களில் இருந்து 2,000 டாலர்களாக(இந்திய மதிப்பில் சுமார் 1.46 லட்சம் ரூபாய்) உயர்த்தி வழங்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், “கொரோனா வைரஸ் பரவலால், நாட்டு மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இது அவர்களுடைய தவறு அல்ல. வைரஸ் பரவலால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளில் இருந்து நாட்டை மீட்டு வருவதற்காக பல திட்டங்களை அறிவித்துள்ளோம். மக்கள், கவுரமாக வாழ உதவிட வேண்டியது அரசின் கடமை. அதனால், இந்த உதவித்தொகையை 2,000 டாலர்களாக உயர்த்தி உத்தரவிட்டுள்ளேன். 

கொரோனா வைரஸ் பாதிப்பால், 1.8 கோடி பேர் வேலையை இழந்துள்ளனர். மக்கள் பசியுடன் இருக்க அனுமதிக்க மாட்டோம். பலர் வீட்டு வாடகைகூட தர முடியாமல் உள்ளனர். பலர் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படுகின்றனர். அது தடுக்கவே, இந்த நிவாரண உதவித்தொகை திட்டம்” என்று அவர் கூறினார்.

Next Story