நேபாளம்: ஆளும் கட்சியில் இருந்து பிரதமர் கே.பி.சர்மா ஒலி நீக்கம்


நேபாளம்: ஆளும் கட்சியில் இருந்து பிரதமர் கே.பி.சர்மா ஒலி நீக்கம்
x
தினத்தந்தி 24 Jan 2021 5:10 PM GMT (Updated: 24 Jan 2021 5:13 PM GMT)

நேபாள ஆளும் கட்சி உறுப்பினர் பதவியில் இருந்து பிரதமர் கே.பி. சர்மா ஒலி நீக்கப்பட்டுள்ளார்.

காத்மாண்டு:

நேபாள நாட்டின் பிரதமராக செயல்பட்டு வருபவர் கே.பி. சர்மா ஒலி. இவர் ஆளும் நேபாள கம்யூனிஸ்டு கட்சியின் தலைவராக இருந்து வருகிறார்.

இதற்கிடையில், பிரதமர் கே.பி. சர்மாவுக்கும், ஆளும் கட்சியின் நிர்வாகக்குழு தலைவர் புஷ்ப கமல் தஹார் பிரசந்தாவுக்கும் இடையே  அதிகார போட்டி ஏற்பட்டது. 

இதனால், பாராளுமன்றத்தை கலைக்க பிரதமர்  கே.பி. சர்மா ஒலி  கடந்த ஆண்டு 20-ம் தேதி பரிந்துரைத்தார். இதையடுத்து, வரும் ஏப்ரல் - மே மாதத்தில் தேர்தல் நடத்தவும் அதிபர் பித்யா தேவி பண்டாரி உத்தரவிட்டார்.

இந்த விவகாரத்தால் ஆளும் நேபாள கம்யூனிஸ்டு கட்சி  கே.பி. சர்மா ஒலி தலைமை மற்றும் புஷ்ப கமல் தஹார் தலைமை என 2 ஆக பிளவு பட்டது. 

பாராளுமன்றத்தை கலைக்க பிரதமர்  கே.பி. சர்மா ஒலி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து புஷ்ப கமல் தஹாரின் தலைமையிலான பிரிவு நேபாளம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும், நேபாள கம்யூனிஸ்டு கட்சி தலைவர் பதவியில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் கே.பி.சர்மா ஒலி நீக்கப்பட்டார்.

இந்நிலையில், புஷ்ப கமல் தஹார் தலைமையிலான கம்யூனிஸ்டு கட்சியின் பிரிவின் மத்திய கமிட்டி கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கே.பி. சர்மா ஒலியை நேபாள கம்யூனிஸ்டு கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க முடிவு எடுக்கப்பட்டது. 

இதையடுத்து, நேபாளம் கம்யூனிஸ்டு கட்சின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து  கே.பி. சர்மா ஒலி நீக்கப்படுவதாக புஷ்ப கமல் தஹார் தலைமையில் பிளவடைந்த கம்யூனிஸ்ட் கட்சியின் செய்தித்தொடர்பாளர் நாராயன் கஞ்ச் ஸ்ரீஸ்தா தெரிவித்துள்ளார்.

Next Story