ரஷ்ய அதிபர் புதினுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேச்சு


ரஷ்ய அதிபர் புதினுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேச்சு
x
தினத்தந்தி 26 Jan 2021 9:01 PM GMT (Updated: 26 Jan 2021 9:01 PM GMT)

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரஷ்ய அதிபர் புதினுடன் தொலைபேசி வாயிலாக பேசினார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் கடந்த சில தினங்களுக்கு முன்பாக பொறுப்பேற்றுக்கொண்டார். அதிபராக பொறுப்பேற்றது முதல் பல்வேறு நாட்டு தலைவர்களுடன் தொலைபேசி மூலமாக ஜோ பைடன் பேசி வருகிறார். அந்த வகையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் ஜோ பைடன்  தொலைபேசியில் பேசினார்.  ஜோ பைடன் பதவியேற்ற பிறகு இரு நாட்டு அதிபர்களும் தொலைபேசியில் பேசிக்கொள்வது இதுதான் முதல் முறையாகும். 

இது தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில், “உக்ரைன் இறையாண்மையை காக்க  அமெரிக்கா உறுதியான ஆதரவு அளிக்கும் என்று ஜோ பைடன் உறுதி படுத்தினார். ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க வீரர்களின் தலைக்கு ரஷ்யா  விலை நிர்ணயம் செய்து இருப்பதாக கூறப்படும் தகவல் மற்றும் அமெரிக்க தேர்தலில் தலையீடு என்ற தகவல்  ஆகிய விவகாரங்கள் குறித்தும் ஜோ பைடன், ரஷ்ய அதிபருடனான பேச்சுவார்த்தையின் போது எழுப்பினார். 

அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு தீங்கு விளைவிக்கும்  வகையிலான ரஷ்யாவின் செயல்களுக்கு எதிராகவும் தேசிய நலன்களைப் பாதுகாப்பதிலும் அமெரிக்கா உறுதியாக செயல்படும் என்று ஜோ பைடன் உறுதி படுத்தினார்.  வெளிப்படையான மற்றும் தொடர்ச்சியான பேச்சுவார்த்தையை முன்னெடுக்க இரு நாட்டு அதிபர்களும் ஒப்புக்கொண்டனர்” என்று தெரிவிக்கப்பட்டது.


Next Story