டிரம்பின் விசா கட்டுப்பாடு வாபஸ்: அமெரிக்காவில் இனி கணவன், மனைவி இருவருக்கும் வேலை; ஜோ பைடன் அதிரடியால் இந்தியர்கள் மகிழ்ச்சி


டிரம்பின் விசா கட்டுப்பாடு வாபஸ்: அமெரிக்காவில் இனி கணவன், மனைவி இருவருக்கும் வேலை; ஜோ பைடன் அதிரடியால் இந்தியர்கள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 28 Jan 2021 8:48 PM GMT (Updated: 28 Jan 2021 8:48 PM GMT)

அமெரிக்காவில் டிரம்ப் பிறப்பித்த விசா கட்டுப்பாடு வாபஸ் பெறப்பட்டுள்ளதால், இனி கணவன், மனைவி இருவரும் வேலை பார்க்கலாம். ஜோ பைடனின் இந்த நடவடிக்கையால் இந்தியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

எச்-4 விசா
அமெரிக்காவில், அந்த நாட்டை சேர்ந்த நிறுவனங்கள் வெளிநாடுகளை சேர்ந்தவர்கணை பணி நியமனம் செய்து கொள்வதற்காக எச்-1பி விசா வழங்கப்படுகிறது. இந்த விசா 3 ஆண்டு காலத்துக்கானது. 6 ஆண்டுகள் வரை நீட்டிக்கத்தக்கது.இந்த விசாக்களால் இந்தியாவை சேர்ந்த ஐ.டி. என்னும் தகவல் தொழில் நுட்பத்துறை பணியாளர்கள் நல்ல பலனை பெற்று வருகிறார்கள்.

இந்த எச்-1பி விசா பெற்றவர் கணவனாக இருந்தால், அவரது மனைவிக்கும், மனைவியாக இருந்தால், அவரது கணவருக்கும் எச்-4 விசா வழங்கப்படுகிறது. இது எச்-1பி விசா பெற்றவரின் வாழ்க்கைத்துணைவரும் அமெரிக்காவில் வேலை பெற வழி வகை செய்துள்ளது. ஒபாமா காலத்தில் கொண்டு வரப்பட்ட இந்த திட்டத்தால், அமெரிக்காவில் எச்-1பி விசா பெற்று வேலை பார்த்து வந்த இந்தியர்களின் மனைவிமார் பெருமளவில் பலன் அடைந்தனர்.

டிரம்ப் ரத்து
ஆனால் 2017-ம் ஆண்டு டிரம்ப் அங்கு அதிகாரத்துக்கு வந்தபோது. எச்-4 விசாதாரர்களின் வேலை வாய்ப்பு அங்கீகாரத்தை ரத்து செய்வதாக அறிவித்தார். இது இந்தியர்களின் வாய்ப்பை தட்டிப்பறிப்பதாக அமைந்தது.

அமெரிக்காவில் அமெரிக்கர்களுக்கே வேலை வாய்ப்பு என்பதில் டிரம்ப் உறுதியாக இருந்ததால் இந்த அறிவிப்பை செய்தார். ஆனால் 4 ஆண்டு கால ஆட்சியில் இதற்கான நடவடிக்கையை டிரம்ப் நிர்வாகத்தால் முழுமையாக செய்து முடிக்க முடியவில்லை.

ஜோ பைடன் வாபஸ்
ஆனால் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின்போது, ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட்ட ஜோ பைடன், டிரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை ரத்து செய்யப்படும் என அறிவித்தார்.அதன்படி இப்போது டிரம்ப் நிர்வாகம் எடுத்த நடவடிக்கையை திரும்பப்பெற்று ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2017-ம் ஆண்டு எச்-4 விசாதாரர்கள் வேலை வாய்ப்பு அங்கீகாரம் கேட்டு விண்ணப்பித்த 1 லட்சத்து 26 ஆயிரத்து 853 பேரது விண்ணப்பங்கள் அமெரிக்க குடியேற்ற அமைப்பால் ஏற்கப்பட்டன. இவர்களில் 93 சதவீதம் பேர் இந்தியர்கள் என்று அமெரிக்க நாடாளுமன்ற ஆராய்ச்சி சேவை புள்ளி விவர அறிக்கை கூறுகிறது. 5 சதவீதத்தினர் சீனாவை சேர்ந்தவர்கள்.

எனவே இப்போது ஜோ பைடன் நிர்வாகம் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை, அமெரிக்காவில் எச்-1பி விசாதாரர்களின் வாழ்க்கைத்துணைவர்கள், எச்-4 விசாவின் கீழ் வேலை வாய்ப்பு பெறுவதற்கான தடையை அகற்றி விட்டது. இது இந்தியர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story