ஈரான் இணங்கி நடந்தால் அணுசக்தி ஒப்பந்தத்தில் அமெரிக்கா சேரும்; புதிய வெளியுறவு மந்திரி அறிவிப்பு


அமெரிக்காவின் புதிய வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன்
x
அமெரிக்காவின் புதிய வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன்
தினத்தந்தி 29 Jan 2021 1:15 AM GMT (Updated: 29 Jan 2021 1:15 AM GMT)

ஈரான் 2015-ம் ஆண்டு, சீனா, பிரான்ஸ், ரஷியா, இங்கிலாந்து, அமெரிக்கா, ஜெர்மனி ஆகிய 6 நாடுகளுடனும், ஐரோப்பிய கூட்டமைப்புடனும் அணுசக்தி தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தியது.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஒப்பந்தம், ஈரான் செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பை 98 சதவீதம் குறைக்கவும், ஈரான் அணுசக்தி நிலையங்களை சர்வதேச அணுசக்தி நிறுவனம் பார்வையிடவும், பதிலுக்கு ஈரான் மீது அமெரிக்கா, ஐரோப்பிய கூட்டமைப்பு, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஆகியோர் விதித்த பொருளாதார தடைகளில் இருந்து நிவாரணம் வழங்கவும் வகை செய்துள்ளது.

ஆனால் இந்த உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா 2018-ம் ஆண்டு தடாலடியாக விலகி, ஈரான் மீது பொருளாதார தடைகளை விதித்தது. ஈரானும் பதிலுக்கு ஒப்பந்தத்தின் விதி முறைகளை மீறியது. இப்போது அமெரிக்காவில் டிரம்ப் நிர்வாகம் போய் ஜோ பைடன் நிர்வாகம் ஆட்சி அதிகாரத்துக்கு வந்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவின் புதிய வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன், இதுபற்றிய முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது, “ஈரானை பொறுத்தமட்டிலல், அந்த நாடு அணுசக்தி ஒப்பந்தத்துக்கு முழுமையாக இணங்கி நடந்து கொண்டால், அமெரிக்காவும் அதை செய்யும். அந்த ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் சேரும். இதில் ஜோ பைடன் தெளிவாக இருக்கிறார். இதை நாம் ஒரு தளமாக பயன்படுத்தி, நமது நட்பு நாடுகள், கூட்டாளிகளுடன் சேர்ந்து நீண்ட மற்றும் வலுவான ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தலாம். ஈரானுடனான உறவில் பல சிக்கலான பிரச்சினைகள் உள்ளன. அந்த புள்ளியில் இருந்து நாம் வெகு தொலைவில் இருக்கிறோம். ஈரான் பல முனைகளில் இணங்கி நடக்கவில்லை” என குறிப்பிட்டார்.

Next Story