ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் நவால்னிக்கு சிறை தண்டனை; உலக நாடுகள் கண்டனம்


Photo Credit: ANI
x
Photo Credit: ANI
தினத்தந்தி 3 Feb 2021 2:27 AM GMT (Updated: 3 Feb 2021 2:27 AM GMT)

ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் நவால்னிக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

மாஸ்கோ,

ரஷிய அதிபர் புதினையும், அவரது அரசின் ஊழலையும் கடுமையாக விமர்சித்து வந்தவர் எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி. இதனால் புதின் அரசு அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி, அவரை தேர்தலில் போட்டியிட முடியாமல் செய்தது. இருப்பினும் அலெக்சி நவால்னி தொடர்ந்து பொதுவெளியில் புதின் அரசை விமர்சித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 3-ந் தேதி டாம்ஸ்க் நகரில் இருந்து மாஸ்கோவுக்கு விமானத்தில் செல்லும்போது அலெக்சி மயங்கி விழுந்தார். இதில் கோமா நிலைக்கு சென்ற அலெக்சி, சிகிச்சைக்காக ஜெர்மனி அழைத்து செல்லப்பட்டார். அவருக்கு கொடுக்கப்பட்ட டீயில் விஷம் கலந்திருந்ததாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜெர்மனியில் தீவிர சிகிச்சை பெற்று பூரண குணமடைந்த அலெக்சி, 4 மாதங்களுக்கு பிறகு கடந்த 17-ந் தேதி ரஷியா திரும்பினார். அப்போது விமான நிலையத்தில் வைத்தே ரஷிய போலீசார் அவரை கைது செய்தனர்.‌ மோசடி வழக்கு ஒன்றில் பரோல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் அவரை கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர். அலெக்சி கைதுக்கு ஐரோப்பிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் அலெக்சியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என ரஷியாவை வலியுறுத்தின.

இந்த நிலையில் அலெக்சி நவால்னி மீதான வழக்கு மாஸ்கோ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. இந்த விசாரணையின் முடிவில் நவால்னிக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும் ஏற்கனவே சில காலம் அவர் வீட்டுச் சிறையில் இருந்ததால், அதற்கு ஏற்ற வகையில் இந்த தண்டனைக் காலம் குறைக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் ரஷ்யாவின் பல்வேறு பகுதிகளில் நவால்னிக்கு ஆதரவாக அவரை விடுதலை செய்யக்கோரி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த போராட்டங்களில் ஈடுபட்டதற்காக இதுவரை 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

உலக நாடுகள் கண்டனம்

நவால்னிக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்கு அமெரிக்கா உள்பட  பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  நவால்னியை விரைவில் விடுதலை செய்ய வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. அதேபோல், இங்கிலாந்து, ஜெர்மனி, கனடா, பிரான்சு உள்ளிட்ட நாடுகளும் நவால்னிக்கு சிறை தண்டனை கொடுக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளன.

Next Story