ஏமன் உள்நாட்டுப்போர்; சவுதி அரேபியாவுக்கு அளிக்கும் ஆதரவை திரும்பப்பெற்றது அமெரிக்கா


ஏமன் உள்நாட்டுப்போர்; சவுதி அரேபியாவுக்கு அளிக்கும் ஆதரவை திரும்பப்பெற்றது அமெரிக்கா
x
தினத்தந்தி 5 Feb 2021 8:42 PM GMT (Updated: 5 Feb 2021 8:42 PM GMT)

மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில், அதிபர் மன்சூர் ஹாதிக்கும், ஹவுதி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.

இந்த போரில் இதுவரை 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஏமன் உள்நாட்டுப் போரில் அதிபர் மன்சூர் ஹாதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. சவுதி அரேபியா தலைமையிலான அரபு நாடுகளின் கூட்டுப் படைகள் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக தரைவழியாகவும் வான்வழியும் தாக்குதல்களை தொடுத்து வருகிறது.

ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான இந்த நடவடிக்கையில் அமெரிக்கா சவுதி அரேபியாவுக்கு ஆதரவு வழங்கி வந்தது. அதாவது சவுதி கூட்டுப்படைகளுக்கு தேவையான ஆயுதங்களை வழங்கி வந்ததோடு, கூட்டுப்படைகளின் வீரர்களுக்கு அமெரிக்க ராணுவம் பயிற்சியும் அளித்து வந்தது.ஏமன் போரில் சவுதி அரேபியாவுக்கு வழங்கி வரும் ஆதரவை திரும்பப் பெற வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி டிரம்பிடம் அப்போதைய எதிர்கட்சியான ஜனநாயக கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால் டிரம்ப் அதனை கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ஜோ பைடன், ஏமன் போரில் சவுதி அரேபியாவுக்கு வழங்கி வந்த ஆதரவைத் திரும்பப் பெறுவதாக நேற்று முன்தினம் அதிரடியாக அறிவித்தார்.‌ 

இதுகுறித்து ஜோ பைடன் கூறும்போது, ‘ஏமனில் நடக்கும் போர் முடிவுக்கு வர வேண்டும். ஏமனில் நடக்கும் போருக்கு அமெரிக்கா அளித்த அனைத்து ஆதரவுகளும் திரும்பப் பெறப்படுகின்றன. இதில் ஆயுத வினியோகமும் அடங்கும்' என்றார்.

Next Story