இலங்கையில் எதிர்ப்பு பேரணி வெற்றி; தமிழ் கட்சிகள் அறிவிப்பு


இலங்கையில் எதிர்ப்பு பேரணி வெற்றி; தமிழ் கட்சிகள் அறிவிப்பு
x
தினத்தந்தி 8 Feb 2021 9:27 PM GMT (Updated: 8 Feb 2021 9:27 PM GMT)

இலங்கையில் தமிழர் பிரச்சினைகளை முன்னிறுத்தி நடத்தப்பட்ட அமைதியான எதிர்ப்பு பேரணி வெற்றி பெற்றதாக தமிழ் கட்சிகள் அறிவித்தன.

கிழக்கில் தொடங்கி வடக்கு வரை...
இலங்கையில் தமிழர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை எடுத்துக்கூறும் வகையில், கிழக்கு அம்பாறை மாவட்டத்தில் இருந்து வடக்கு யாழ்ப்பாண மாவட்டம் வரை தமிழர் கட்சிகளால் பேரணி நடத்தப்பட்டது. கடந்த 3-ந் தேதி அம்பாறை பொட்டுவில்லில் தொடங்கிய இந்த 4 நாள் பேரணி, யாழ்ப்பாணத்தின் பொலிகண்டியில் முடிவடைந்தது.

வெற்றி
இந்த பேரணி பெரிய வெற்றி பெற்றதாக இதன் ஏற்பட்டாளர்கள் தெரிவித்தனர். தமிழ் தேசிய கூட்டணியின் கிழக்கு மாகாண எம்.பி.யான சாணக்கியன் ராசமாணிக்கம், தங்கள் எதிர்பார்ப்பையும் மீறி மக்கள் பெருமளவில் பேரணியில் பங்கேற்றதாகவும், முஸ்லிம் அரசியல் கட்சிகளும் கலந்துகொண்டது ஊக்கமளிப்பதாக இருந்ததாகவும் கூறினார்.

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தில் இடம்பெற்ற குற்றங்களுக்கான நீதிக்கு சர்வதேச நடவடிக்கை வேண்டும் ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் அறிவித்தநிலையில் இந்த பேரணி நடந்தது. ஐ.நா. அறிவிப்பை இலங்கை அரசு நிராகரித்துவிட்டது.

குற்றச்சாட்டு
பேரணியில் பங்கேற்றவர்கள், இலங்கையில் யுத்தம் முடிவுற்ற 2009-ம் ஆண்டு முதல் தமிழர் நிலங்கள் பறிக்கப்படுவதாகவும், தமிழ் மக்கள் பகுதிகளில் திட்டமிட்டு சிங்கள குடியேற்றம் நடைபெறுவதாகவும் குற்றம்சாட்டினர். பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் பெயரில் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்ந்து சிறைவாசம் அனுபவித்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

அமைதியான இந்த பேரணியில் அரசியல்வாதிகள் பங்கேற்கவிடாமல் தடுக்கும் வகையில் அவர்களில் பலருக்கு கோர்ட்டு உத்தரவு வழங்கப்பட்டதாகவும் புகார் கூறப்பட்டது.

Next Story