அமீரகம் வரலாற்று சாதனை; 7 மாதங்களுக்கு பிறகு செவ்வாய் கிரகத்தை அடைந்தது; ‘ஹோப்’ விண்கல பயணம் வெற்றி


அமீரகம் வரலாற்று சாதனை; 7 மாதங்களுக்கு பிறகு செவ்வாய் கிரகத்தை அடைந்தது; ‘ஹோப்’ விண்கல பயணம் வெற்றி
x
தினத்தந்தி 10 Feb 2021 12:59 AM GMT (Updated: 10 Feb 2021 12:59 AM GMT)

அமீரகத்தின் ‘ஹோப்’ விண்கலம் கடந்த 7 மாத பயணத்திற்கு பிறகு நேற்று செவ்வாய் கிரக சுற்றுவட்டப்பாதையை அடைந்தது. இதை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.

அமீரக அதிபர் மேதகு ஷேக் கலீபா பின் ஜாயித் அல் நஹ்யான் வழிகாட்டுதலில் கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் அமீரகத்தின் செவ்வாய் கிரக பயண திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

‘ஹோப்’ விண்கலம்
இந்த பயணத்திட்டத்தில் முதல் முறையாக அமீரகத்தில் முற்றிலும் உருவாக்கப்பட்ட ‘ஹோப்’ விண்கலம் ஒன்றை 2021-ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்புவது இதன் நோக்கமாகும். இந்த விண்கலமானது மனிதர்கள் இல்லாமல் அனுப்ப திட்டமிடப்பட்டது.அதன்படி விண்கலத்தை உருவாக்கும் பணியானது துபாய் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் விண்வெளி மையத்தின் சார்பில் நடைபெற்றது. இதற்கான முன்தயாரிப்பு பணிகளை அமீரக துணை அதிபரும், துபாய் ஆட்சியாளருமான மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் கடந்த 2016-ம் ஆண்டில் தொடங்கி வைத்தார்.

அந்த விண்கலத்தை 200 அமீரக பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் உருவாக்கினார்கள். இந்த ஆண்டில் அமீரகத்தின் 50-வது தேசிய தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை கொண்டாடும் வகையில் இந்த செவ்வாய் கிரக பயண திட்டமானது செயல்படுத்தப்பட்டது.

நீண்ட பயணம்
அமீரகத்தின் ‘ஹோப்’ விண்கலம் கடந்து சென்ற மாபெரும் விண்வெளி பயணம் மிக நீண்ட தொலைவானதாகும். பூமியில் இருந்து மிக அருகாமையில் வரும்போது செவ்வாய் கிரகமானது 6 கோடி கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும். ஆனால் விண்கலம் ஒன்று அதன் சுற்றுவட்டப்பாதையை அடைய வேண்டும் என்றால் 49 கோடியே 35 லட்சம் கி.மீ தொலைவு பயணம் செய்தாக வேண்டும்.

அதற்காக ‘ஹோப்’ விண்கலம் பூமியில் இருந்து மணிக்கு 39 ஆயிரத்து 600 கிலோ மீட்டர் வேகத்தில் விண்ணில் ராக்கெட் மூலம் செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த ‘ஹோப்’ விண்கலம் விண்வெளியில் மனிதர்களால் கற்பனை செய்ய முடியாத அளவில் மணிக்கு 1 லட்சத்து 26 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்தது.

204 நாட்கள்
பின்னர், செவ்வாய்கிரகத்திற்கு மிக அருகில் சென்றவுடன் அதன் வேகமானது மணிக்கு 18 ஆயிரம் கிலோமீட்டர் வேகமாக குறைக்கப்பட்டது. இதில் பூமியில் இருந்து செவ்வாய்கிரகத்திற்கு இந்த விண்கலம் சென்றடைய 204 நாட்கள் எடுத்துக்கொண்டது. அதாவது 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் 20-ந் தேதி தொடங்கிய பயணம் இந்த ஆண்டில் நேற்று செவ்வாய் கிரகத்தின் அருகே சென்றடைந்தது. இதற்காக கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஜப்பான் நாட்டில் உள்ள டனகஷிமா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து இந்த விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.

இறுதி நிமிடங்கள்
அமீரகம் மட்டுமல்லாமல் உலகமே எதிர்பார்த்துக் கொண்டு இருந்த இறுதிகட்ட நிமிடங்கள் பலரை நிமிர்ந்து பார்க்க வைத்தது. நேற்று இரவு அந்த விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள டெல்டா 5 என்ற 6 திரஸ்டர் என்ஜின்கள் சுற்றுவட்டப்பாதையை நெருங்கும்போது இயக்கப்பட்டது.

இதனை துபாய் முகம்மது பின் ராஷித் விண்வெளி மையத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தின் மூலம் இயக்கப்பட்டது. இதில் அந்த விண்கலத்தில் உள்ள பாதி எரிபொருள் செலவிடப்பட்டது. மிகச்சரியாக 27 நிமிடங்கள் இயக்கப்பட்டது.

முதல் சிக்னல் கிடைத்தது
‘ஹோப்’ விண்கலம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையை நேற்று இரவு 7.30 மணியளவில் நெருங்கியது. ஆனால் மிக நீண்ட தொலைவு காரணமானதால் அதனை உறுதிப்படுத்தும் சிக்னல் 12 நிமிடங்கள் தாமதமாக இரவு 7.42 மணிக்கு பூமிக்கு அனுப்பப்பட்டது.

இந்த சிக்னல்கள் ஸ்பெயின் நாட்டி மாட்ரிட் பகுதியில் உள்ள ஆண்டெனா மூலம் பெறப்பட்டது. முதல் சிக்னல் 7.50 மணியளவில் கிடைத்ததும் விஞ்ஞானிகள், பொறியாளர்கள் கைதட்டி ஆராவாரம் செய்து ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

செவ்வாய் கிரகத்தை அடைந்தது
இந்த நிலையில் அடுத்த சிக்னல் 27 நிமிடங்கள் திரஸ்டர் என்ஜின்கள் இயங்கி முடித்ததும் கிடைத்தது. இதில் எந்த திரஸ்டர் என்ஜினும் பழுது இல்லாமல் இயங்கியது. சரியாக 8.20 மணியளவில் செவ்வாய் கிரக சுற்றுவட்டப்பாதையை ‘ஹோப்’ விண்கலம் அடைந்ததை திட்ட மேலாளர் ஒமரான் ஷரப் உறுதி செய்து அறிவித்தார். உடனடியாக கட்டுப்பாட்டு மையத்தில் இருந்த விஞ்ஞானிகள், பொறியாளர்கள் கைதட்டி ஆராவாரம் செய்தனர்.

தற்போது அந்த ‘ஹோப்’ விண்கலம் செவ்வாயின் மேற்பரப்பில் 1,062 கி.மீ உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டு, 25 டிகிரி கோணத்தில் அதன் சுற்றுவட்டப்பாதையில் சுற்ற தொடங்கியது.

விண்கலத்தில் உள்ள சிறப்பு கருவிகள்
இந்த விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள சிறப்பு ஆய்வு கருவிகள் மூலம் செவ்வாய் கிரகத்தின் மேலடுக்கில் உள்ள காலநிலை, பனி மேகங்கள், அங்குள்ள வானில் உள்ள காற்று மண்டலத்தில் கலந்துள்ள ஆக்சிஜன், ஹைட்ரஹன் மூலக்கூறுகளின் அளவு ஆகியவை ஆய்வு செய்யப்பட உள்ளது. இதற்காக சிறப்பு உணரும் பகுதிகளுடன் கூடிய 3 கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

செவ்வாய் கிரகத்தின் பரப்பில் இருந்து அதிகபட்சமாக 49 ஆயிரத்து 380 கி.மீ உயரத்தில் இருந்தும், குறைந்தபட்சமாக 1000 கி.மீ தொலைவில் இருந்தும் தகவல்களை அளிக்க உள்ளது. இந்த ‘ஹோப்’ விண்கலம் செவ்வாய் கிரகத்தை முழுமையாக சுற்றிவர 55 மணி நேரம் எடுத்துக்கொள்ளும்.

அமீரக தலைவர்கள் மகிழ்ச்சி
‘ஹோப்’ விண்கல பயணத்தினை அமீரக தலைவர்கள் துபாய் முகம்மது பின் ராஷித் விண்வெளி மையத்திற்கு சென்று ஆர்வத்துடன் கவனித்து வந்தனர். அமீரக நேரப்படி இரவு சுமார் 8.20 மணியளவில் வெற்றிகரமாக செவ்வாயின் சுற்றுவட்டப்பாதையில் நுழைந்ததும் அமீரக தலைவர்கள் மட்டற்ற மகிழ்ச்சியை அடைந்தனர்.

அமீரக துணை அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம், அபுதாபி பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான், துபாய் பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் ஆகியோர் நேரடியாக கட்டுப்பாட்டு மையத்திற்குள் சென்று தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்து அமீரக பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

பாராட்டு
இதையடுத்து அமீரகத்தின் ஏனைய பகுதிகளின் ஆட்சியாளர்கள், பட்டத்து இளவரசர்கள், அமீரக மந்திரிகள், அரசுத்துறை உயர் அதிகாரிகள் என பலரும் தங்கள் மகிழ்ச்சியினை தெரிவித்து வருகின்றனர். பொதுமக்கள் உற்சாகத்துடன் தங்கள் வாழ்த்துகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொண்டு வருகின்றனர்.

இந்த மகத்தான வரலாற்று சிறப்புமிக்க சாதனைக்கு அமெரிக்கா, இந்தியா, சீனா உள்ளிட்ட உலக நாடுகளின் விண்வெளி ஏஜென்சிகள் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டு வருகிறது. வெற்றியை கொண்டாடும் வகையில் புர்ஜ் கலீபாவில் சிறப்பு வாணவேடிக்கை மற்றும் லேசர் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

Next Story