வரலாறு படைத்தது ஐக்கிய அரபு அமீரகம் நம்பிக்கை விண்கலம் செவ்வாய் கிரகத்தை சென்றடைந்தது


வரலாறு படைத்தது ஐக்கிய அரபு அமீரகம் நம்பிக்கை விண்கலம் செவ்வாய் கிரகத்தை சென்றடைந்தது
x
தினத்தந்தி 11 Feb 2021 12:14 AM GMT (Updated: 11 Feb 2021 12:14 AM GMT)

வளைகுடா நாடுகளில் முதல் முறையாக ஐக்கிய அரபு அமீரகம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 19-ந் தேதி ‘நம்பிக்கை' என்ற விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பியது.

அபுதாபி, 

வளைகுடா நாடுகளில் முதல் முறையாக ஐக்கிய அரபு அமீரகம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 19-ந் தேதி ‘நம்பிக்கை' என்ற விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பியது.

1.3 டன் எடை கொண்ட இந்த விண்கலம் ஜப்பானில் உள்ள தானேகஷிமா விண்வெளி மையத்தில் இருந்து எச்-2ஏ ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.

2021-ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகம் நிறுவப்பட்டதன் பொன்விழா ஆண்டு ஆகும். அதன் நினைவாகவே இந்த நம்பிக்கை விண்கலம் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்டது.

இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் ‘நம்பிக்கை' விண்கலம் 49 கோடியே 50 லட்சம் கி.மீ. விண்வெளியில் பயணித்து, 201 நாட்கள் பயணம் செய்து, நேற்று முன்தினம் மாலை செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட பாதையை சென்றடைந்தது. இதன் மூலம் ஐக்கிய அரபு அமீரகம் வரலாற்று சாதனை படைத்துள்ளது.

இது குறித்து ஐக்கிய அரபு அமீரகத்தின் அரசு விண்வெளி நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “வெற்றி! நம்பிக்கை விண்கலம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையை அடைந்தது. அங்கு இது செவ்வாய் வளிமண்டலத்தின் முதல் முழுமையான படத்தை வழங்கும். நம்பிக்கை விண்கலம் செவ்வாய் கிரகத்தை எட்டியது மூலம் ஐக்கிய அரபு அமீரகம் விண்வெளி அறிவியல் துறையில் உலகளாவிய சாதனையாளர்களின் உயரடுக்கு பட்டியலில் இணைந்துள்ளது” என கூறப்பட்டுள்ளது.

இதுதவிர சீனா அனுப்பிய விண்கலமும், அமெரிக்கா அனுப்பிய விண்கலமும் செவ்வாய் கிரகத்தின் அருகே சென்றுள்ளன. சீனாவின் விண்கலம் இன்றும், அமெரிக்காவின் விண்கலம் அடுத்த வாரத்திலும் செவ்வாய் கிரகத்தின் நீள்வட்டப்பாதைக்குள் நுழையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story