நியூசிலாந்தில் மீண்டும் ஊரடங்கு


நியூசிலாந்தில் மீண்டும் ஊரடங்கு
x
தினத்தந்தி 15 Feb 2021 12:24 AM GMT (Updated: 15 Feb 2021 12:24 AM GMT)

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தபோதிலும் சிறிய தீவு நாடான நியூசிலாந்து வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டுவந்து கொரோனா இல்லாத நாடாக உருவெடுத்தது.

வெல்லிங்டன், 

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தபோதிலும் சிறிய தீவு நாடான நியூசிலாந்து வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டுவந்து கொரோனா இல்லாத நாடாக உருவெடுத்தது. அதன்பிறகு வெளிநாட்டில் இருந்து கொரோனாவுடன் வந்தவர்களையும் சரியாக கையாண்டு நோய் பரவலை தடுத்தது பிரதமர் ஜெசிந்தா தலைமையிலான நியூசிலாந்து அரசு.

கொரோனாவை சிறப்பாக கையாண்ட காரணத்தால் பிரதமர் ஜெசிந்தா பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் பிரதமரானார். கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து நியூசிலாந்தில் உள்நாட்டுக்குள் கொரோனா பரவல் இல்லாத நிலை நீடித்தது. இந்த நிலையில், முதல்முறையாக உள்நாட்டிலேயே 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நியூசிலாந்தின் மிகப்பெரிய நகரான ஆக்லாந்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து ஆக்லாந்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு அடுத்த 3 நாட்களுக்கு அமலில் இருக்கும் என பிரதமர் ஜெசிந்தா தெரிவித்துள்ளார். இந்த 3-ம் நிலை ஊரடங்கு கட்டுப்பாடுகளின்படி, மக்கள் அனைவரும் வீட்டுக்குள் இருக்க வேண்டும். அத்தியாவசிய பணிகள் மற்றும் பொருட்களை வாங்க மட்டுமே வெளியே வர வேண்டும். ஏற்கனவே கொரோனாவை கட்டுப்படுத்த நியூசிலாந்து மேற்கொண்ட அதே முயற்சிகளை தீவிரமாக மேற்கொள்ளவிருப்பதாக அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

Next Story