ஈரான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் 100 பெட்ரோல் டேங்கர் லாரிகள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு


ஈரான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் 100 பெட்ரோல் டேங்கர் லாரிகள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 15 Feb 2021 12:34 AM GMT (Updated: 15 Feb 2021 12:34 AM GMT)

ஈரான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் 100 பெட்ரோல் டேங்கர் லாரிகள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு 60 பேர் படுகாயம்.

காபூல், 

ஆப்கானிஸ்தானின் மேற்குப் பகுதியில் ஹெரட் மாகாணத்தில் ஈரான் நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள இஸ்லாம் குவாலா நகரில் சுங்கத்துறை சோதனைச்சாவடி உள்ளது. ஈரானில் இருந்து வரும் வாகனங்கள் மற்றும், ஈரானுக்கு செல்லும் வாகனங்கள் இங்கு தணிக்கை செய்யப்படுகின்றன. எனவே, இந்த பகுதியில் எப்போதும் வாகனங்கள் அதிக அளவில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். அந்தவகையில் நேற்று முன்தினம் சுங்கத்துறை வளாகத்தில் 100-க்கும் மேற்பட்ட பெட்ரோல் டேங்கர் லாரிகள் நிறுத்தப்பட்டிருந்தன.

அப்போது அவற்றில் ஒரு டேங்கர் லாரி திடீரென வெடித்துச் சிதறின. என்ன நடக்கிறது என்று சுதாரிப்பதற்குள், அடுத்தடுத்து லாரிகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து தீப்பிடித்தன.

இதனால் அங்கு பெரும் பதற்றமும் உருவானது. வாகன ஓட்டுனர்கள் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். எனினும் பலர் தீப்பிடித்த பகுதியை விட்டு வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர்.

நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் கொழுந்து விட்டு எரிந்ததால் அந்த பகுதி முழுவதும் கரும் புகை மண்டலம் சூழ்ந்தது.

விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டனர். அவர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் 60-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர் அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.‌ இந்த விபத்துக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை நடந்து வருகிறது. 

Next Story