அமீரகத்தில் வேலைக்கு சேர போலியான சான்றிதழ்களை வழங்கினால் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை


அமீரகத்தில் வேலைக்கு சேர போலியான சான்றிதழ்களை வழங்கினால் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை
x
தினத்தந்தி 17 Feb 2021 1:24 AM GMT (Updated: 17 Feb 2021 1:24 AM GMT)

அமீரகத்தில் வேலைக்கு சேர போலியான பட்டப்படிப்பு சான்றிதழ்களை வழங்கினால் சிறைத்தண்டனை மற்றும் 10 லட்சம் திர்ஹாம் வரை அபராதம் விதிக்கும் புதிய வரைவுச் சட்டம் மத்திய தேசிய கவுன்சில் கூட்டத்தில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.

அபுதாபி,

மத்திய தேசிய கவுன்சில் கூட்டம் அபுதாபியில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு அமீரக மத்திய தேசிய கவுன்சில் சபாநாயகர் சகர் கோபாஸ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் புதிய வரைவுச் சட்டம் தொடர்பான விவாதம் நடந்தது.

துபாய் உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இந்தியா, பாகிஸ்தான், எகிப்து மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் வேலைக்காக வருகின்றனர். இவர்களில் சிலர் போலியான சான்றிதழ்களை கொடுத்து ஏமாற்ற முயற்சிக்கின்றனர். இதனை தடுக்க பல்வேறு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக அமீரகத்தில் வேலைக்கு சேர போலியான பட்டப்படிப்பு உள்ளிட்ட சான்றிதழ்களை வழங்கினால் அவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 10 லட்சம் திர்ஹாம் வரை அபராதம் விதிக்கும் வகையில் புதிய வரைவுச் சட்டம் மத்திய தேசிய கவுன்சில் கூட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

பரிந்துரை

இதுமட்டுமல்லாமல் வேலைக்காக தேர்வு செய்யும் ஏஜென்சிகளை ஒழுங்குபடுத்தவும், போலியான சான்றிதழ் என தெரிந்தும் அதனை ஏற்றுக் கொள்ளும் நிறுவனங்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அமீரகத்தில் உள்ள நிறுவனங்களில் வேலைக்கு சேர்பவர்களின் சான்றிதழ்களின் உறுதித்தன்மை குறித்து அமீரக உயர்கல்வித்துறையால் ஆய்வு செய்யப்படுகிறது.

இது குறித்து அமீரக உயர்கல்வித்துறை துணை மந்திரி டாக்டர் அகமது அல் பலாசி பேசும்போது கூறியதாவது:-

சான்றிதழின் உறுதித்தன்மை

உயர்கல்வித்துறையால் தொடர்ந்து சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு வருகிறது. எனினும் இந்த சான்றிதழ் சரிபார்க்கப்படும் போது கடந்த 2018-ம் ஆண்டில் மட்டும் 143 போலியான சான்றிதழ்கள் பிடிபட்டது. அந்த சான்றிதழ்களை சமர்ப்பித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனினும் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் இந்த புதிய வரைவுச் சட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது.

மேலும் எந்த ஒரு சான்றிதழும் சரிபார்க்கப்படும் முன்னர் அந்த சான்றிதழ் எந்த நாட்டில் வழங்கப்பட்டது என ஆய்வு செய்யப்படுகிறது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நாட்டின் தூதரகம் மற்றும் பல்கலைக்கழகம் உள்ளிட்டவற்றில் இருந்து அந்த சான்றிதழ் தங்களால் வழங்கப்பட்டது தான் என உறுதி செய்யப்படுகிறது. அதன் பின்னரே அந்த சான்றிதழின் உறுதித்தன்மையானது இறுதி செய்யப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

தனியார் நிறுவனங்களில்...

அரசு மற்றும் அரசு ஆதரவு பெற்ற நிறுவனங்களில் சேர்பவர்களிடம் மட்டுமே சான்றிதழ்கள் பெறுவது கட்டாயமாக பின்பற்றப்படுகிறது. எனினும் பெரும்பாலான தனியார் நிறுவனங்களில் இந்த முறை சரிவரை கடைப்பிடிக்கப்படுவதில்லை.

வேலைக்கு சேரும் போது போலியான சான்றிதழ்களை வழங்கும் நடவடிக்கையானது இந்த புதிய சட்டத்தின் மூலம் தடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வரைவுச் சட்டம் தொடர்பான விவாதத்தில் துபாயைச் சேர்ந்த உறுப்பினர் ஹமத் அல் ரகூமி உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர்.


Next Story