காங்கோவில் தோன்றிய மர்ம உலோகத் தூணை கொளுத்திய பொதுமக்கள்


காங்கோவில் தோன்றிய மர்ம உலோகத் தூணை கொளுத்திய பொதுமக்கள்
x
தினத்தந்தி 18 Feb 2021 1:38 AM GMT (Updated: 18 Feb 2021 1:38 AM GMT)

காங்கோவில் தோன்றிய மர்ம உலோகத் தூணை அங்குள்ள மக்கள் தீயிட்டு கொளுத்தினர்.

கின்ஷாசா,

உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் ‘மோனோலித்’ என்று அழைக்கப்படும் மர்ம உலோகத்தூண் தோன்றுவது சமீப காலமாக நிகழ்ந்து வருகிறது. அமெரிக்காவின் உட்டா பாலைவனத்தில் முதன் முதலாக இத்தகைய தூண் ஒன்று தோன்றிய போது இது வேற்றுகிரகவாசிகளின் செயலாக இருக்கக் கூடும் என பலர் கருத்து தெரிவித்தனர்.

அதனை தொடர்ந்து பல நாடுகளில் இது போன்ற தூண்கள் தற்செயலாக தோன்றியதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. ஆனால் அவற்றில் பெரும்பாலானவை மக்களின் கவனத்தை கவர்வதற்காக சில ஆசாமிகள் செய்த ஏமாற்று வேலைகள் என்பது பின்னர் தெரிய வந்தது.

அந்த வகையில் காங்கோ குடியரசு நாட்டின் கின்ஷாசா பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை, இது போன்ற மர்ம உலோகத் தூண் ஒன்று தோன்றியுள்ளது. அந்த தூண் எவ்வாறு அங்கு வந்தது என்பது யாருக்கும் தெரியாத நிலையில், பலரும் அதன் முன்பு நின்று செல்பி எடுத்துச் சென்றனர்.

இந்த நிலையில் நேற்று காலை அந்த தூண் முன்பு திரண்ட பொதுமக்களில் சிலர் அதன் மீது தீயை பற்ற வைத்தனர். பலர் அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றினர். ‘மோனாலித்’ எனப்படும் இந்த உலோகத் தூண் முதன் முறையாக 1968 ஆம் ஆண்டு ஹாலிவுட் இயக்குனர் ஸ்டான்லி குப்ரிக் இயக்கிய ‘2001; ஸ்பேஸ் ஒடிசி’ திரைப்படத்தில் காட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story