ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மாரிசன் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்


ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மாரிசன் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்
x
தினத்தந்தி 22 Feb 2021 9:54 AM GMT (Updated: 22 Feb 2021 9:54 AM GMT)

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு வந்த ஒரு சில நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்று. பிரதமர் ஸ்காட் மாரிசன் தலைமையிலான அரசு கொரோனா வைரசை சிறப்பாக கையாண்டு வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

கான்பெர்ரா, 

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு வந்த ஒரு சில நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்று. பிரதமர் ஸ்காட் மாரிசன் தலைமையிலான அரசு கொரோனா வைரசை சிறப்பாக கையாண்டு வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. இங்கு தினசரி பாதிப்பு ஒற்றை இலக்கத்தில் இருந்து வருகிறது. இருப்பினும் நாட்டில் கொரோனா வைரசின் 2-வது அலை ஏற்படாமல் தடுப்பதற்கு பிரதமர் ஸ்காட் மாரிசன் அரசு தீவிரமாக பணியாற்றி வருகிறது.‌

அந்த வகையில் அமெரிக்காவின் பைசர் நிறுவனம் மற்றும் இங்கிலாந்தின் ஆஸ்ட்ரஜெனகா நிறுவனம் தயாரித்துள்ள 2 கொரோனா தடுப்பூசிகளுக்கு ஆஸ்திரேலிய அரசு அண்மையில் ஒப்புதல் வழங்கியது. இதனைத்தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நேற்று தொடங்கின.

முதற்கட்டமாக சுகாதார ஊழியர்களுக்கும், வயது முதிர்ந்தவர்களுக்கும் தடுப்பூசிகள் வழங்கப்படுகிறது. அந்த வகையில் 84 வயதான ஜேன் மாலிசியாக் முதல் நபராக தடுப்பூசி போட்டுக்கொண்டார். அதேபோல் அந்த நாட்டின் பிரதமர் ஸ்காட் மாரிசனும் நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “இந்த தொற்று நோயில் இருந்து நாம் மீள்வதற்கான ஒரு முக்கியமான நாள் இன்று. ஆஸ்திரேலியாவில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசிகள் இலவசமாகவும், தன்னார்வமாகவும் உள்ளன. மேலும் இந்த தடுப்பூசிகள் பாதுகாப்பானதாகவும், பயனுள்ளதாகவும் இருப்பதை நமது சொந்த மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்” என குறிப்பிட்டுள்ளார்.

Next Story