அபுதாபியில், கடல் பாதுகாப்பு கண்காட்சி தொடங்கியது விமானங்கள் வானில் வண்ணப் பொடிகளை தூவி சீறி பாய்ந்தன


அபுதாபியில், கடல் பாதுகாப்பு கண்காட்சி தொடங்கியது விமானங்கள் வானில் வண்ணப் பொடிகளை தூவி சீறி பாய்ந்தன
x
தினத்தந்தி 22 Feb 2021 11:29 AM GMT (Updated: 22 Feb 2021 11:29 AM GMT)

அபுதாபியில் கடல் பாதுகாப்பு தொடர்பான கண்காட்சியை நிர்வாக கவுன்சில் உறுப்பினர் ஷேக் ஹமத் பின் ஜாயித் அல் நஹ்யான் தொடங்கி வைத்தார். அப்போது அமீரக விமானப்படை விமானங்கள் வானில் வண்ணப் பொடிகளை தூவி சீறி பாய்ந்து சென்றன.

அபுதாபி,

அபுதாபி தேசிய கண்காட்சி மையத்தில், சர்வதேச பாதுகாப்பு கண்காட்சி நேற்று தொடங்கியது. 27-வது ஆண்டாக இந்த கண்காட்சி நடக்கிறது. அமீரக அதிபர் மேதகு ஷேக் கலீபா பின் ஜாயித் அல் நஹ்யான் ஆதரவுடன் நடக்கும் இக்கண்காட்சி வருகிற 25-ந் தேதி வரை நடைபெறும்.

இந்த கண்காட்சியில் ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, இந்தியா, ஓமன், சீனா, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 97 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். மேலும் 59 நாடுகளைச் சேர்ந்த 900 நிறுவனங்கள் இதில் பங்கேற்றுள்ளன.

கொரோனா பாதிப்பை தொடர்ந்து இந்த ஆண்டில் நடைபெறும் முதலாவது மிகப்பெரிய சர்வதேச கண்காட்சி இதுவாகும். மிக நீண்ட நாட்களுக்கு பின்னர் பொதுமக்கள் அதிக அளவில் பங்கேற்கும் கண்காட்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.

விமானங்கள் வண்ணப்பொடிகளை தூவியது

இந்த கண்காட்சியின் ஒரு பகுதியாக கடல் பாதுகாப்பு தொடர்பான கண்காட்சி நடக்கிறது. இந்த கண்காட்சியை அபுதாபி நிர்வாக கவுன்சில் உறுப்பினர் ஷேக் ஹமத் பின் ஜாயித் அல் நஹ்யான் நேற்று திறந்து வைத்தார். அப்போது அமீரக விமானப்படை விமானங்கள் வானில் வண்ணப் பொடிகளை தூவி சீறி பாய்ந்து சென்றன.

பின்னர் அவர் இங்கு அமைக்கப்பட்டுள்ள பல்வேறு அரங்குகளை பார்வையிட்டார். அவருக்கு அரங்குகளின் பிரதிநிதிகள் அங்குள்ள நவீன பாதுகாப்பு பொருட்கள் குறித்த விவரங்களை தெரிவித்தனர். அப்போது அவருடன் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்

6-வது ஆண்டாக இந்த கடல் பாதுகாப்பு தொடர்பான கண்காட்சி நடக்கிறது. இதில் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த 17 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. இக்கண்காட்சியில் நவீன ரக போர்க்கப்பல்கள், ரோந்து மற்றும் மீட்பு படகுகள், எதிரிகளின் இலக்குகளை அழிக்க உதவும் சாதனங்கள் என நவீன தொழில்நுட்பம் கொண்ட பல்வேறு வகையானவை இடம் பெற்றுள்ளன.

மேலும் இதில் கடல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் நவீன தொலைத்தொடர்பு சாதனங்களும் வைக்கப்பட்டிருந்தன. இந்த பாதுகாப்பு கண்காட்சியின் மூலம், பாதுகாப்புத்துறை தொடர்பான வர்த்தகம் குறித்த ஒப்பந்தங்கள் அதிக அளவு கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story