பாஸ்போர்ட்டை காண்பிக்காமல் ஸ்மார்ட் முறையில் முகத்தை காண்பித்து பயணம் செய்யும் புதிய வசதி துபாய் சர்வதேச விமான நிலையத்தில் அறிமுகம்


துபாய் சர்வதேச விமான நிலையத்தில் பயணி ஒருவரின் முகம் ஸ்கேன் செய்யப்பட்டபோது எடுத்த படம்.
x
துபாய் சர்வதேச விமான நிலையத்தில் பயணி ஒருவரின் முகம் ஸ்கேன் செய்யப்பட்டபோது எடுத்த படம்.
தினத்தந்தி 22 Feb 2021 8:35 PM GMT (Updated: 22 Feb 2021 8:35 PM GMT)

துபாய் சர்வதேச விமான நிலையத்தில் பாஸ்போர்ட்டை காண்பிக்காமல் ஸ்மார்ட் முறையில் முகத்தை காண்பித்து பயணம் செய்யும் புதிய வசதி நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.

இது குறித்து துபாய் குடியிருப்பு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்தவர் விவகாரத்துறையின் பொது இயக்குனகரத்தின் இயக்குனர் முகம்மது அகமது அல் மர்ரி கூறியதாவது:-

ஆவணங்கள் கட்டாயமில்லை

துபாய் உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது. இதன் காரணமாக விமான பயணம் மேற்கொள்ளும் பயணிகள் எந்தவித சிரமமும் இல்லாமல் பயணம் செய்யும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து ஊடகத்துறையினருக்கு தெரிவிக்கும் வகையில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தற்போது துபாய் முனையம் எண் 3 வழியாக பயணம் செய்யும் போது பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை காண்பிக்க வேண்டிய கட்டாயமில்லை.

சிறப்பு கேமராக்கள்

ஏற்கனவே இந்த வசதியானது சோதனை முறையில் செய்யப்பட்டிருந்தது. தற்போது நேற்று முதல் இந்த வசதி பயன்பாட்டுக்கு வருகிறது. இந்த புதிய வசதியின் மூலம் ஏற்கனவே தங்களை பற்றிய விவரங்களை பதிவு செய்துள்ளவர்கள் விமான நிறுவனத்தின் ஊழியர்களிடம் தங்களது உடைமைகளை ஒப்படைத்து விட்டு செல்லலாம்.

ஏற்கனவே பதிவு செய்யாதவர்கள் விமான நிலைய கவுண்டரில் சென்று தங்களது விவரங்களை பதிவு செய்து, முகத்தையும் ஸ்கேன் செய்து கொள்ளலாம். இதற்காக சிறப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதன் பின்னர் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை வைத்துக் கொண்டு ஸ்மார்ட் கேட் மூலம் நடந்து செல்லலாம்.

இருக்கைக்கான அனுமதி சீட்டு

வழக்கமாக வெளிநாடுகளுக்கு செல்லும்போது குடியேற்ற துறை கவுண்டருக்கு சென்று பாஸ்போர்ட்டில் முத்திரை குத்தப்படும். இந்த புதிய முறையின் கீழ் முத்திரை குத்த வேண்டிய அவசியமில்லை.

தற்போது தினமும் 3 ஆயிரம் பேருக்கு மேல் ஸ்மார்ட் கேட்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்த புதிய வசதியின் மூலம் ஸ்மார்ட் கேட்டை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதன் மூலம் பயணிகள் விரைவாக செல்ல உதவியாக இருக்கும். மேலும் விமானத்துக்குள் இருக்கைக்கான அனுமதி சீட்டு (போர்டிங் பாஸ்) பெற வேண்டிய தேவையில்லை.

மேம்படுத்தப்படும்

இதற்காக தற்போது 8 ஸ்மார்ட் கேட்கள் உள்ளன. தேவையை கருத்தில் கொண்டு இவை மேலும் அதிகரிக்கப்படும். இதன் மூலம் 17 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே முகத்தை அடையாள காட்டி விட்டு செல்ல முடியும்.

இதுமட்டுமல்லாமல் அமீரக அடையாள அட்டையை பயன்படுத்தி 122 ஸ்மார்ட் கேட்கள் உள்ளன. இவையும் படிப்படியாக மேம்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story