அமீரகத்தின் அடுத்த 50 ஆண்டு திட்டங்கள் குறித்து விவாதிக்க இன்று நடைபெறும் மந்திரி சபை கூட்டத்தில் அபுதாபி பட்டத்து இளவரசருடன் பங்கேற்கிறேன்; துணை அதிபர் வீடியோவில் தகவல்


மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம், மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான்
x
மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம், மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான்
தினத்தந்தி 22 Feb 2021 8:44 PM GMT (Updated: 22 Feb 2021 8:44 PM GMT)

அமீரகத்தின் அடுத்த 50 ஆண்டு திட்டங்கள் குறித்து விவாதிக்க இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் மந்திரிசபை கூட்டத்தில் அபுதாபி பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யானுடன் நான் பங்கேற்கிறேன்.

இத்தகவலை அமீரக துணை அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:-

நான் பங்கேற்கிறேன்

அமீரக அதிபர் மேதகு ஷேக் கலீபா பின் ஜாயித் அல் நஹ்யான் வழிகாட்டுதலின் பேரில் அமீரகத்தில் அடுத்த 50 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டப்பணிகள் குறித்து விவாதிக்க மந்திரிசபை கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) கூடுகிறது. இந்த கூட்டத்தில் அபுதாபி பட்டத்து இளவரசருடன், நான் பங்கேற்கிறேன்.

அமீரகத்துக்கு இந்த ஆண்டு மிகவும் முக்கியமான ஆண்டாகும். மேலும் அடுத்த 50 ஆண்டுகளில் அமீரகம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டிய முக்கியமான தருணம் இதுவாகும்.

பொருளாதார நிலைமை

கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்னர் பாலைவனமாக இருந்த இந்த நாடு தற்போது ஒரு மிகப்பெரிய நகரமாக காட்சியளிக்கிறது. இந்த நகரத்தில் முன்பு இருந்ததை விட நவீன வசதிகள் பல இங்கு இருந்து வருகின்றன. இதேபோல் எதிர்காலத்தில் பன்மடங்கு சிறப்பான சூழ்நிலைகளை கொண்டதாக இந்த நாடு இருக்கும் வகையில் திட்டமிடப்பட வேண்டியுள்ளது.

குறிப்பாக வர்த்தக சூழ்நிலைகளும், பொருளாதார நிலைமையும் மிகவும் முக்கியமானதாகும். எதிர்கால தலைமுறையினருக்கு சிறப்பான வசதியை செய்து கொடுக்க புதிய கண்டுபிடிப்புகளும், பல்வேறு புதிய திறன்களும் அத்தியாவசியமாக இருந்து வருகிறது. அதற்கேற்ப இளைஞர்களுக்கு தேவையான பயிற்சிகள் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது.

புதிய திட்டப்பணிகள்

இன்று நடைபெறும் மந்திரிசபை கூட்டத்தில் அடுத்த 50 ஆண்டுகளில் அமீரகம் உலகின் மிகச் சிறந்த நாடுகளில் ஒன்றாக இருக்கும் வகையில் புதிய திட்டப்பணிகள் திட்டமிடப்படும். இந்த பணி அமீரகத்தின் பொன்விழா ஆண்டான இந்த ஆண்டில் தொடங்கப்படும்.

மேலும் இந்த பணியில் அமீரகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் பங்கேற்பர். மேலும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களும், தன்னார்வ தொண்டு அமைப்புகளும் ஈடுபடும் வகையில் வாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுக்கப்படும்.

இன்றும், நாளையும் நடக்கும்

இந்த திட்டப்பணிகள் குறித்து அமைச்சரவைக்கு பரிந்துரை செய்யும் வகையில் 2 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த 50 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து அறிக்கை தயாரிக்க முதலாவது கமிட்டிக்கு அமீரக துணை பிரதமரும், ஜனாதிபதி விவகாரத்துறை மந்திரியுமான ஷேக் மன்சூர் பின் ஜாயித் அல் நஹ்யான் தலைமை தாங்குவார்.

அமீரகத்தின் 50 ஆண்டு பொன்விழா ஆண்டை சிறப்பாக கொண்டாடும் வகையில் அமைக்கப்பட்டுள்ள குழுவுக்கு அமீரக வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்புத்துறைக்கான மந்திரி ஷேக் அப்துல்லா பின் ஜாயித் அல் நஹ்யான் தலைமை வகிப்பார். அடுத்த 50 ஆண்டு பணிகள் குறித்து விவாதிக்க இந்த கூட்டமானது இன்றும், நாளையும் நடைபெறும்.

இவ்வாறு அமீரக துணை அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் தெரிவித்தார்.


Next Story