அமீரகத்தில் உருவான ‘சாதியாத்’ கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது


அமீரகத்தில் உருவான ‘சாதியாத்’ கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது
x
தினத்தந்தி 22 Feb 2021 8:50 PM GMT (Updated: 22 Feb 2021 8:50 PM GMT)

அமீரகத்தில் தயாரிக்கப்பட்ட ‘சாதியாத்’ கப்பலை அபுதாபி மனிதாபிமான அறக்கட்டளை தலைவர் ஷேக் நஹ்யான் பின் ஜாயித் அல் நஹ்யான் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

‘சாதியாத்’ கப்பல்

அபுதாபி தேசிய கண்காட்சி மையத்தில் சர்வதேச பாதுகாப்பு மற்றும் கடல் பாதுகாப்பு தொடர்பான கண்காட்சி நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த கண்காட்சியானது வருகிற 25-ந் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த கண்காட்சியின் ஒரு பகுதியாக அமீரகத்திலேயே முழுக்க, முழுக்க தயாரிக்கப்பட்ட, ‘சாதியாத்’ என்ற கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற அபுதாபி ஜாயித் பின் சுல்தான் அல் நஹ்யான் தன்னார்வ மற்றும் மனிதாபிமான அறக்கட்டளையின் தலைவர், ஷேக் நஹ்யான் பின் ஜாயித் அல் நஹ்யான் ‘சாதியாத்’ கப்பலை கடற்படைக்கு அர்ப்பணித்தார். பின்னர் அவர் இத்தகைய நவீன கப்பலில் இணைந்துள்ள கடற்படை வீரர்களை வரவேற்றார். மேலும் அவர்களின் பணி சிறப்பாக அமைய வாழ்த்துகளை தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் கப்பலில் உள்ள பல்வேறு வசதிகளையும் பார்வையிட்டார். அவருக்கு கப்பற்படை அதிகாரிகள் அங்குள்ள வசதிகள் குறித்து விவரித்தனர்.

நவீன வசதி

இந்த கப்பல் 71 மீட்டர் நீளமும், 14 மீட்டர் அகலமும் கொண்டது. மேலும் இந்த கப்பல் அமீரகத்தில் உள்ள அல் பத்தான் கப்பல் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டதாகும்.

இந்த கப்பல் பல்வேறு நவீன வசதிகளை கொண்டுள்ளது. குறிப்பாக போர் நடைபெறும் சமயத்தில் தேவையான ஆயுதங்களை கொண்டு செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் மனிதாபிமானப் பணிகளுக்கு உதவும் வகையில் பொருட்களை கொண்டு செல்வது, கடற்படைக்கு தேவையான பொருட்களை எடுத்துச் செல்வது உள்ளிட்ட வசதிகளும் உள்ளது.

இதுமட்டுமல்லாமல் மருத்துவ அத்தியாவசியப் பணிகளுக்கு உதவிடும் வகையிலும் இந்த கப்பலில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கடல் பகுதிகளில் செல்பவர்களுக்கு திடீர் உடல் நல பாதிப்பு நேரும்பொது அவர்களுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் வசதிகள் உள்ளன.


Next Story