இந்தோனேசியாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம்: ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 22 Feb 2021 10:30 PM GMT (Updated: 22 Feb 2021 10:36 PM GMT)

இந்தோனேசியாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டனர்.

ஜகார்த்தா, 

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கன மழை கொட்டுகிறது. இதனால் அந்த நாட்டின் மிகப் பெரிய ஆறான சிட்டாரம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதேபோல் இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் உள்ள பெக்காசி மாவட்டத்தில் சனிக்கிழமை முதல் பலத்த மழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்கு தேசிய பேரிடர் மற்றும் மீட்பு பணியில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

பெகாசி மாவட்டத்தின் நான்கு கிராமங்களிலும், கராவாங் மாவட்டத்தில் 34 கிராமங்களிலும் 28,000 க்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் தணிப்பு அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ரதித்யா ஜாதி தெரிவித்தார். மேலும் குறைந்தது 4,000 பேர் வெளியேற்றப்படுகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் அந்தப்பகுதியில் ஆயிரக்கணக்கான வீடுகள் 100 முதல் 250 சென்டிமீட்டர் தண்ணீரில் மூழ்கியுள்ளன. அங்கு மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளன. 

சமீபத்திய நாட்களில் பருவகால மழை மற்றும் அதிக அலை காரணமாக இந்தோனேசியாவின் பெரும்பகுதி முழுவதும் 10க்கும் மேற்பட்ட நிலச்சரிவுகள் மற்றும் பரவலான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story