சீன நிறுவனங்கள் மீதான ஒருதலைபட்ச பொருளாதார தடைகளை நீக்க வேண்டும் - அமெரிக்காவுக்கு சீனா வலியுறுத்தல்


சீன நிறுவனங்கள் மீதான ஒருதலைபட்ச பொருளாதார தடைகளை நீக்க வேண்டும் - அமெரிக்காவுக்கு சீனா வலியுறுத்தல்
x
தினத்தந்தி 23 Feb 2021 3:07 AM GMT (Updated: 23 Feb 2021 3:07 AM GMT)

சீன நிறுவனங்கள் மீதான ஒருதலைப்பட்ச பொருளாதார தடைகளை அமெரிக்கா நீக்க வேண்டும் என சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி தெரிவித்துள்ளார்.

பீஜிங்,

அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவியேற்ற ஜோ பைடன், கடந்த 11-ந்தேதி சீன அதிபர் ஜின்பிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது சீனாவின் நியாயமற்ற பொருளாதார செயல்பாடுகள், ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்பு சட்டம் கொண்டு வந்து, ஜனநாயக ஆர்வலர்களை ஒடுக்கும் நடவடிக்கைகள், சின்ஜியாங்கில் உய்குர் இன மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் மனித உரிமை மீறல்கள் உள்ளிட்டவற்றில் ஜோ பைடன் தனது கவலையை வெளிப்படுத்தினார்.

அதன் பின்னர் இந்த பேச்சுவார்த்தை குறித்து ஜோ பைடன் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில் சீனாவில் மனித உரிமை மீறல்களுக்கு விளைவுகள் இருக்கும் எனக்கூறி சீனாவுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில் அமெரிக்கா சீனா உறவுகளில் கவனம் செலுத்துவது தொடர்பான சீன வெளியுறவு அமைச்சகத்தின் வருடாந்திர மாநாடு தலைநகர் பீஜிங்கில் நேற்று நடந்தது. இதில் அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி கலந்து கொண்டு உரையாற்றினார்.‌ அப்போது அவர் பேசியதாவது;-

சீனாவின் முக்கிய நலன்கள் தேசிய கவுரவம் மற்றும் வளர்ச்சிக்கான உரிமைகளை அமெரிக்கா மதிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். சீன கம்யூனிஸ்டு கட்சி மற்றும் சீன அரசியலமைப்பை கறை படுத்துவது, தைவானின் பிரிவினைவாத சக்திகளின் தவறான சொற்களையும் செயல்களையும் ஆதரிப்பது, ஹாங்காங், திபெத் மற்றும் சின்ஜியாங் தொடர்பான விவகாரங்களில் சீனாவின் இறையாண்மையும் பாதுகாப்பையும் குறை மதிப்புக்கு உட்படுத்துவது ஆகியவற்றை அமெரிக்கா நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

சீனாவின் பொருட்களின் மீதான நியாயமற்ற கட்டணங்களை நீக்குவது, சீனாவின் வர்த்தக நிறுவனங்கள் ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனங்கள் மீதான ஒருதலைபட்ச பொருளாதார தடைகளை நீக்குவது, சீனாவை பகுத்தறிவற்ற முறையில் அடக்குவதை கைவிடுவது ஆகியவற்றுடன் அமெரிக்கத் தரப்பு தனது கொள்கைகளை சீக்கிரம் சரி செய்யும் என்று நம்புகிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.‌

Next Story