உலக செய்திகள்

அமெரிக்காவில் கொரோனா பலி 5 லட்சத்தை தாண்டியது; வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ஜோ பைடன் மெழுகுவர்த்தி ஏற்றி மவுன அஞ்சலி + "||" + President Biden Delivers Emotional Remembrance Of 500,000 COVID-19 Victims

அமெரிக்காவில் கொரோனா பலி 5 லட்சத்தை தாண்டியது; வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ஜோ பைடன் மெழுகுவர்த்தி ஏற்றி மவுன அஞ்சலி

அமெரிக்காவில் கொரோனா பலி 5 லட்சத்தை தாண்டியது; வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ஜோ பைடன் மெழுகுவர்த்தி ஏற்றி மவுன அஞ்சலி
அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியதை தொடர்ந்து வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ஜோ பைடன் மெழுகுவர்த்தி ஏற்றி மவுன அஞ்சலி செலுத்தினார். மேலும் நாடு முழுவதும் அடுத்த 5 நாட்களுக்கு தேசிய கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விட உத்தரவிட்டார்.
கொரோனாவின் கோரப்பிடியில்...
உலகின் மிகவும் சக்திவாய்ந்த நாடுகளில் ஒன்றான அமெரிக்கா ஓராண்டுக்கும் மேலாக கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தவித்து வருகிறது. உலகிலேயே அதிக கொரோனா நோயாளிகள் மற்றும் அதிக உயிரிழப்புகளை எதிர்கொண்ட முதல் நாடாக அமெரிக்கா இருக்கிறது. அங்கு கொரோனாவின் கோர தாண்டவத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியுள்ளது. இது அமெரிக்காவின் 3 போர்களில் பலியானவர்களின் எண்ணிக்கையைவிட அதிகமாகும்.

வெள்ளை மாளிகையில் மவுன அஞ்சலி
2-ம் உலகப்போரில் அமெரிக்காவில் 4 லட்சத்து 5 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். வியட்நாம் போரில் 58 ஆயிரம் பேரும், கொரியப் போரில் 36 ஆயிரம் பேரும் பலியாகினர். இந்த நிலையில் அமெரிக்காவில் கொரோனாவுக்கு 5 லட்சம் பேர் பலியானதையொட்டி நேற்று முன்தினம் மாலை வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ஜோ பைடன் மெழுகுவர்த்திகளை ஏற்றி மவுன அஞ்சலி செலுத்தினார். அவரது மனைவி ஜில் பைடன் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் அவரது கணவர் டக் எம்ஹாப் ஆகியோரும் கொரோனாவில் இறந்தவர்களுக்காக மவுன அஞ்சலி செலுத்தினர்.

இதயத்தை உடைக்கும் மைல்கல்
2 நிமிட மவுன அஞ்சலிக்கு பிறகு நாட்டு மக்களிடம் உரையாற்றிய ஜோ பைடன் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அடுத்த 5 நாட்களுக்கு நாடு முழுவதும் தேசியக் கொடிகளை அரை கம்பத்தில் பறக்க விட உத்தரவிட்டார். தொடர்ந்து அவர் பேசியதாவது:-

இன்று நாம் உண்மையிலேயே கடுமையான, இதயத்தை உடைக்கும் மைல்கல்லை குறிக்கிறோம். 5 லட்சத்துக்கும் அதிகமானோர் இறந்து விட்டனர். சாதாரண அமெரிக்கர்கள் என்று வர்ணிக்கப்படும் மக்களை நாங்கள் அடிக்கடி கேட்கிறோம். ஆனால் அப்படி எதுவும் இல்லை. அவர்களைப் பற்றி சாதாரணமாக எதுவும் இல்லை.

அனைவரும் அசாதாரணமானவர்கள்
அமெரிக்காவில் பிறந்தவர்கள் ஆயினும் சரி, அமெரிக்காவுக்குக் குடி பெயர்ந்தவர்கள் ஆயினும் சரி நாம் இழந்தவர்கள் அனைவருமே அசாதாரணமானவர்கள். அவர்கள் தலைமுறைகளை பரப்பினார்கள்.
நம் வாழ்வின் ஒரு அங்கமாக இருக்கும் நபர் திடீரென நம்முடன் இல்லாமல் போவதின் வேதனை எனக்கு புரியும். 1972-ல் கார் விபத்தில் எனது மனைவி மற்றும் மகளை இழந்தேன். 2015-ம் ஆண்டில் மூளை புற்றுநோயால் எனது மகன் இறந்தார்.

ஒவ்வொருவரின் உயிரும் காக்கப்பட வேண்டும்
ஆனாலும் ஒரு தேசமாக இத்தகைய கொடூரமான விதியை நாம் ஏற்றுக்கொள்ளமுடியாது. துக்கத்துக்கு உணர்ச்சியற்றவர்களாக இருப்பதை நாம் எதிர்க்க வேண்டும். இன்று நான் எல்லா அமெரிக்கர்களையும் நினைவில் கொள்ளும் படி கேட்டுக் கொள்கிறேன். நாம் இழந்தவர்களை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்‌. நம்மை விட்டு சென்றவர்களை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.‌

கொரோனா உயிரிழப்பை தடுக்க மிகவும் முயன்று வருகிறோம். இருப்பினும் உயிரிழப்பு அதிகரித்துள்ளது வேதனையாக இருக்கிறது. ஒவ்வொருவரின் உயிரும் காக்கப்பட வேண்டும். அதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவை எதிர்த்துப் போராடுவோம்.

இவ்வாறு ஜோ பைடன் பேசினார்.