செவ்வாயில் ரோவர் தரை இறங்கும் வீடியோ நாசா வெளியிட்டது


செவ்வாயில் ரோவர் தரை இறங்கும் வீடியோ நாசா வெளியிட்டது
x
தினத்தந்தி 24 Feb 2021 11:08 AM GMT (Updated: 24 Feb 2021 11:08 AM GMT)

செவ்வாய் கிரகத்தில் பெர்செவரன்ஸ் ரோபோ ரோவர் தரை இறங்கும் கடைசி நிமிட காட்சிகளை கொண்ட வீடியோவை நாசா வெளியிட்டு, உலகை பரவசத்தில் ஆழ்த்தி உள்ளது.

கேப்கேனவரல்,

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்தனவா என்பது குறித்து ஆராயவும், அங்கிருந்து பாறைத்துகள்களை சேகரிக்கவும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் நாசா, செர்செவரன்ஸ் ரோபா ரோவரை அனுப்பி இருந்தது.

இந்த ரோவர் கடந்த 18-ந்தேதி செவ்வாய் கிரகத்தில், பழமையான நதிப்படுகையில் ஜெசிரோ கிரேட்டர் என்ற பள்ளத்தில் மெல்ல தரை இறங்கியது.

இந்த ரோவர் தரை இறங்குவதற்கு முந்தைய துல்லியமான படம் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியாகி உலகை வியப்பில் ஆழ்த்தியது.

வீடியோ காட்சி

இப்போது அந்த ரோவர் செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கும் கடைசி நிமிட காட்சிகளை கொண்ட வீடியோவை நேற்று முன்தினம் நாசா வெளியிட்டுள்ளது. இதில் ரோவரின் வேகம் குறைக்கப்பட்டு, பாராசூட் உதவியுடன் ரோவர் தரை இறங்குவதும், அதன் 6 சக்கரங்களும் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் கால் பாதிப்பதும் பரவசப்படுத்துவதாக அமைந்துள்ளது.

இந்த வீிடியோ காட்சிகள் மிக நன்றகாக இருக்கின்றன என்று அந்த ரோவர் குழுவினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இந்த காட்சியை பார்க்கிற ஒவ்வொரு தருணமும் அது ஆச்சரியத்தை தருகிறது என்று அதன் நுழைவு மற்றும் தரை இறக்க கேமரா குழுவின் தலைவர் டேவ் குரூயல் கூறினார்.

பிரத்யேக கேமராக்கள்

இந்த வீடியோவும், படங்களும் எங்கள் கனவுகளின் பொருள் என்று தரை இறங்கும் குழுவின் பொறுப்பாளராக இருந்த அல் சென் தெரிவித்தார்.

3 பில்லியன் டாலர் மதிப்பிலான (சுமார் ரூ.22 ஆயிரத்து 500 கோடி) இந்த ரோவர் திட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 25 கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பதும், அவற்றில் 7 கேமராக்கள் தரை இறங்கும் காட்சிகளை படம்பிடிக்கவே பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இன்னும் 2 ஆண்டுகள் பெர்செவரன்ஸ் ரோவர், செவ்வாய் கிரகத்தில் தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபடும், படங்களையும், வீடியோக்களையும் அவற்றின் கேமராக்கள் எடுத்து அனுப்பும் என்பது குறிப்பிடத்தக்கது.


Related Tags :
Next Story