மியான்மர் ராணுவம் ஆட்சி அதிகாரத்தை கைவிட வேண்டும்; அமெரிக்கா எச்சரிக்கை


அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ்
x
அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ்
தினத்தந்தி 24 Feb 2021 11:10 PM GMT (Updated: 24 Feb 2021 11:10 PM GMT)

மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை ராணுவம் கடந்த 1-ந்தேதி கவிழ்த்துவிட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.

மேலும் அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களை கைது செய்து தடுப்புக் காவலில் வைத்துள்ளது.மியான்மர் ராணுவத்தின் இந்த நடவடிக்கைக்கு உலகின் பெரும்பாலான நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. குறிப்பாக அமெரிக்கா, மியான்மர் ராணுவத்தை வன்மையாக கண்டித்ததோடு மட்டுமல்லாமல் ராணுவ தலைவர்கள் மீது பொருளாதார தடைகளையும் விதித்தது.

இதற்கிடையில் மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான மக்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து அதேசமயம் மியான்மர் ராணுவம் இந்த போராட்டத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க முயற்சித்து வருகிறது.

இந்தநிலையில் மியான்மர் விவகாரம் குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் ‘‘மியான்மர் ராணுவ ஆட்சி குழுவுக்கு நாங்கள் அனுப்பிய செய்தி மாறவில்லை. அவர்கள் அதிகாரத்தை கைவிட வேண்டும். ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை மீட்டெடுக்க வேண்டும். நாங்கள் மியான்மர் மக்களுடன் துணை நிற்கிறோம். மியான்மரில் மக்களாட்சியைக் கொண்டு வருவதற்கான அவர்களின் விருப்பத்தை ஆதரிப்பதற்காக உலகெங்கிலுமுள்ள எங்களுடன் ஒத்த எண்ணம் கொண்ட கூட்டாளிகளுடன் இணைந்து செயல்படுவோம்’’ எனக் கூறினார்.

மேலும் அவர் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை மாற்றுவதற்கான முயற்சிகள் மற்றும் போராட்டங்களை ஒடுக்குவதற்கான வன்முறை நடவடிக்கைகள் கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என மியான்மர் ராணுவத்துக்கு எச்சரிக்கை விடுத்தார்.‌


Next Story