இந்தியாவுக்கு செல்ல கொரோனா பரிசோதனை கட்டாயம்: அமீரக மருத்துவ நிலையங்களில் அலைமோதிய கூட்டம்


இந்தியாவுக்கு செல்ல கொரோனா பரிசோதனை கட்டாயம்: அமீரக மருத்துவ நிலையங்களில் அலைமோதிய கூட்டம்
x
தினத்தந்தி 25 Feb 2021 10:21 AM GMT (Updated: 25 Feb 2021 10:21 AM GMT)

இந்தியாவுக்கு செல்ல குழந்தைகள் உள்ளிட்ட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்வது கட்டாயமாக இருப்பதால் அமீரக மருத்துவ நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது.

துபாய்,

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியாவுக்கு நாள்தோறும் சராசரியாக 3 ஆயிரம் பேர் பயணம் செய்து வருகின்றனர். இதில் குழந்தைகளும் அடங்குவர். ஏற்கனவே ஒரு சில மாநிலங்களில் கொரோனா பரிசோதனை செய்வதில் இருந்து விலக்கு இருந்து வந்தது.

தற்போது அமீரகம் மற்றும் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அமீரகத்தில் இருந்து இந்தியாவின் அனைத்து விமான நிலையங்களுக்கும் செல்பவர்கள் கட்டாயமாக கொரோனா மருத்துவ பரிசோதனை செய்து அதன் முடிவுகளை எடுத்துச் செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டம் அலைமோதுகிறது

பெரியவர்கள் மட்டுமல்லாது குழந்தைகளுக்கும் இந்த பரிசோதனை செய்வது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசோதனையானது விமான பயணம் மேற்கொள்வதற்கு 72 மணி நேரத்துக்கு முன்பாக செய்திருக்க வேண்டும். இதன் காரணமாக துபாய் உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மருத்துவ நிலையங்களில் கொரோனா பரிசோதனை மையங்களுக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கையானது படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனால் மருத்துவ நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது.

துபாய் சுகாதார ஆணையத்தின் வழிகாட்டுதல்படி சாதாரணமாக 150 திர்ஹாம் பரிசோதனைக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனினும் சில நிறுவனங்கள் குழந்தைகளுக்கு பரிசோதனை செய்ய கட்டண சலுகை வழங்கி வருகிறது. பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு சில மையங்களில் கூடுதல் நேரம் பரிசோதனை செய்யப்படுகிறது.


Next Story