நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும்; லண்டன் கோர்ட்டு உத்தரவு


நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும்; லண்டன் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 26 Feb 2021 4:19 AM GMT (Updated: 26 Feb 2021 4:19 AM GMT)

ரூ.14 ஆயிரம் கோடி வங்கிக்கடன் மோசடி வழக்கில் வைர வியாபாரி நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த லண்டன் கோர்ட்டு உத்தரவிட்டது.

நிரவ் மோடி
இந்தியாவை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி. இவர், பஞ்சாப் நேஷனல் வங்கியிடம் இருந்து முறைகேடாக பெற்ற கடிதத்தை பயன்படுத்தி, பல்வேறு வங்கிகளில் ரூ.14 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் வாங்கி திருப்பிச் செலுத்தவில்லை. சி.பி.ஐ. பிடி இறுகியதால், கடந்த 2018-ம் ஆண்டு லண்டனுக்கு தப்பிச் சென்றார். சி.பி.ஐ. வேண்டுகோளின்பேரில், அங்கு கைது 
செய்யப்பட்டார்.லண்டனில் உள்ள வாண்ட்ஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது ஜாமீன் மனுக்கள் அடுத்தடுத்து தள்ளுபடி செய்யப்பட்டன.

நாடு கடத்த உத்தரவு
நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்தக்கோரி இந்தியா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. இவ்வழக்கில் நீதிபதி சாமுவேல் கூசி நேற்று தீர்ப்பு அளித்தார்.அதற்காக, லண்டன் சிறையில் இருந்தபடி நிரவ் மோடி காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.

அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த நீதிபதி உத்தரவிட்டார். மோசடி மற்றும் சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பான பூர்வாங்க ஆதாரங்கள் இருப்பது நிரூபிக்கப்பட்டு இருப்பதாகவும், அதனால், அவர் இந்தியாவுக்கு திரும்பி அந்த வழக்குகளை சந்திக்க வேண்டும் என்றும் தனது தீர்ப்பில் நீதிபதி கூறியுள்ளார்.

மனநிலை பாதிப்பா?
சாட்சிகளை அச்சுறுத்தியதாகவும், ஆதாரங்களை அழித்ததாகவும் இந்தியா சுமத்திய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். நிரவ் மோடிக்கு மனநிலை சரியில்லை என்ற வாதத்தை நீதிபதி நிராகரித்தார். மும்பை ஆர்தர் ரோடு ஜெயிலில் நிரவ் மோடிக்கு உரிய மருத்துவ சிகிச்சையும், மனநல சிகிச்சையும் அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.தனது தீர்ப்பை இங்கிலாந்து உள்துறை மந்திரி பிரீத்தி படேலுக்கு அனுப்பி வைப்பதாகவும் நீதிபதி கூறினார்.

மேல்முறையீடு
இந்தியா-இங்கிலாந்து இடையிலான நாடு கடத்தும் ஒப்பந்தப்படி, குற்றவாளியை நாடு கடத்துவதற்கு இங்கிலாந்து உள்துறை மந்திரிக்குத்தான் அதிகாரம் உண்டு. அவர் 2 மாதங்களுக்குள் முடிவு எடுப்பார்.நாடு கடத்தப்படும் நாட்டில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க வாய்ப்புள்ளதா என்பது போன்ற சட்ட சிக்கல்களை மட்டுமே பார்த்து உள்துறை மந்திரி முடிவு எடுப்பார். நிரவ் மோடிக்கு மரண தண்டனை விதிக்க வாய்ப்பு இல்லை என்பதால், அவர் நாடு கடத்த ஒப்புதல் அளிக்கலாம் என்று தெரிகிறது.
இருப்பினும், நிரவ் மோடி, இந்த தீர்ப்பை எதிர்த்து லண்டன் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்ய 14 நாட்களுக்குள் விண்ணப்பிக்கலாம். அவருக்கு அனுமதி கிடைத்தால், அவரது மேல்முறையீட்டை லண்டன் ஐகோர்ட்டின் நிர்வாக அமர்வு விசாரிக்கும்.

Next Story