14 நாட்களுக்கு பின்னர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் ரத்த தானம் செய்யலாம் சுகாதாரத்துறை அதிகாரி தகவல்


14 நாட்களுக்கு பின்னர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் ரத்த தானம் செய்யலாம் சுகாதாரத்துறை அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 26 Feb 2021 12:12 PM GMT (Updated: 26 Feb 2021 12:12 PM GMT)

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் 14 நாட்கள் கழித்து ரத்த தானம் செய்யலாம் என்று அபுதாபி சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

அபுதாபி,

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் 14 நாட்கள் கழித்து ரத்த தானம் செய்யலாம் என்று அபுதாபி சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அபுதாபி அபுதாபி சுகாதார சேவைத்துறையின் அதிகாரி டாக்டர் மர்வான் அல் காபி கூறியதாவது:-

கொரோனா தடுப்பூசி

ஐக்கிய அரபு அமீரகத்தில் ரத்தத்தின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக ரத்த தானம் செய்ய முன்வருபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துள்ளது. மேலும் ரமலான் உள்ளிட்ட மாதங்களிலும் ரத்த தானம் செய்வது வழக்கத்தை விட குறைந்து காணப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், அபுதாபி, துபாய் உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தடுப்பூசி போடும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், 84 ஆயிரத்து 573 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தம் 58 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு இதுவரை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையானது 100-க்கு 59.11 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

ரத்த தானம்

தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு ஒருசிலர் ரத்த தானம் செய்ய யோசனை செய்கின்றனர். பக்க விளைவு எதுவும் வந்துவிடுமோ என பயப்படுகின்றனர். கொரோனா தடுப்பூசியின் முதலாவது மற்றும் இரண்டாவது டோஸ் போட்டுக் கொண்டவர்கள் அதனைத் தொடர்ந்து 14 நாட்களுக்கு பின்னர் ரத்த தானம் செய்யலாம். இதனால் அவர்களுக்கு எந்தவித பக்க விளைவோ அல்லது வேறு எந்த பாதிப்போ ஏற்படாது.

இது குறித்து பொதுமக்களுக்கு சந்தேகம் எதுவும் இருந்தால் சுகாதாரத்துறையின் வாடிக்கையாளர் சேவை மையத்தை அழைத்து தெரிந்து கொள்ளலாம்.

கொரோனா பரவல் காரணமாக ரத்த வங்கியிலும், ரத்தம் கொடுப்பவர்களுக்கும் உயர்தர பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அங்கு சமூக இடைவெளி மற்றும் சானிடைசர் கொண்டு தூய்மைப்படுத்தும் பணி உள்ளிட்டவை தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது.

ஒவ்வொரு நாளும் அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக ரத்தத்தின் தேவை அதிகரித்து வருகிறது. எனவே ரத்த தானம் செய்ய பொதுமக்கள் முன்வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story