சிங்கப்பூரில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறிய இந்திய பெண்ணுக்கு சிறை


சிங்கப்பூரில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறிய இந்திய பெண்ணுக்கு சிறை
x
தினத்தந்தி 26 Feb 2021 11:50 PM GMT (Updated: 26 Feb 2021 11:50 PM GMT)

சிங்கப்பூரில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறிய இந்திய பெண்ணுக்கு சிறை

சிங்கப்பூர்,

சிங்கப்பூரில் வசித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் அகதா மகேஷ் ஐயமலை (வயது 39). இவர் இங்கிலாந்தை சேர்ந்த நைகல் ஸ்கீயா (52) என்பவரை காதலித்து வந்தார்.‌

இவர்கள் இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நைகல், தனது காதலியைப் பார்ப்பதற்காக சிங்கப்பூர் சென்றார்.

அந்த சமயத்தில் சிங்கப்பூரில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வந்ததால், நைகல் அங்குள்ள ஒரு ஓட்டலில் கட்டாயமாக தனிமைப் படுத்தப்பட்டார். ஓட்டல் அறையை விட்டு வெளியே வரக்கூடாது என்றும் வெளி நபர்கள் யாரையும் சந்திக்க கூடாது என்றும் அவருக்கு அறிவுறுத்தப்பட்டது.

ஆனால் அவர் தனது காதலி அகதா மகேஷை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஓட்டலில் வந்து தன்னை சந்திக்கும்படி கூறினார்.‌

இதையடுத்து அகதா மகேஷ் அதே ஓட்டலில் வாடகைக்கு அறை எடுத்து தங்கினார்.

பின்னர் நைகல், முக கவசம் கூட அணியாமல் தனது அறையிலிருந்து வெளியேறி, அகதா மகேஷின் அறைக்கு சென்று இரவு முழுவதும் அங்கு தங்கியுள்ளார்.

பின்னர் காலையில் தனது அறைக்கு திரும்பும் போது அங்கு பணியில் இருந்த சுகாதார ஊழியரிடம் சிக்கிக்கொண்டார்.‌

இதையடுத்து கடுமையான கொரோனா கட்டுப்பாடுகளை மீறியதாக நைகல் மற்றும் அகதா மகேஷ் மீது வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்கு தலைநகர் சிங்கப்பூர் கோர்ட்டில் நடந்து வந்தது.

இதற்கிடையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நைகல் மற்றும் அகதா மகேஷ் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில் அவர்கள் மீதான வழக்கில் இருவரும் குற்றவாளிகள் என இந்த மாத தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டனர்.

இந்தநிலையில் நேற்று இந்த வழக்கில் நீதிபதி தனது தீர்ப்பை வழங்கினார். நைகலுக்கு 2 வாரங்களும், அகதா மகேஷுக்கு ஒரு வாரமும் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் நைகலுக்கு 1,000 ஒரு டாலர் ( இந்திய மதிப்பில் ரூ.55 ஆயிரம்) அபராதமும் விதிக்கப்பட்டது.

Next Story