அமீரகத்துக்கு சுற்றுலா விசாவில் வந்தவர்கள் இந்த மாதம் இறுதி வரை அபராதம் இன்றி தங்கிக் கொள்ளலாம்; வெளிநாட்டு விவகார இயக்குனரகம் அறிவிப்பு


அமீரகத்துக்கு சுற்றுலா விசாவில் வந்தவர்கள் இந்த மாதம் இறுதி வரை அபராதம் இன்றி தங்கிக் கொள்ளலாம்; வெளிநாட்டு விவகார இயக்குனரகம் அறிவிப்பு
x
தினத்தந்தி 1 March 2021 11:53 AM GMT (Updated: 1 March 2021 11:53 AM GMT)

அமீரகத்துக்கு சுற்றுலா விசாவில் வந்தவர்கள் இந்த மாதம் இறுதி வரை அபராதம் இன்றி தங்கிக் கொள்ளலாம் என குடியிருப்பு மற்றும் வெளிநாட்டு விவகார பொது இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த இயக்குனரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

31-ந் தேதி வரை நீட்டிப்பு
அமீரகத்துக்கு சுற்றுலா விசாவில் வந்தவர்கள் அவர்களது விசா காலம் கடந்த ஆண்டு டிசம்பர் 28-ந் தேதியுடன் நிறைவடைந்திருந்தாலும், அவர்களது விசாவானது எந்தவிதமான அபராதமும் இல்லாமல் இந்த மாதம் (மார்ச்) 31-ந் தேதி வரை நீட்டிக்கப்படும்.

இதன் காரணமாக பொதுமக்கள் தங்களது சுற்றுப்பயணத்தை இந்த மாதம் இறுதி வரை நீட்டித்து பல்வேறு இடங்களை பார்வையிட உதவியாக இருக்கும். அமீரக துணை அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் கடந்த டிசம்பர் 27-ந் தேதி ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

கொரோனா பரவல்
அந்த அறிவிப்பில் சுற்றுலா விசாவில் வந்தவர்களின் விசாவானது மேலும் ஒரு மாத காலம் நீட்டிக்கப்படும் என உத்தரவு பிறப்பித்திருந்தார். கொரோனா பரவல் காரணமாக பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

மேலும் சில நாடுகள் விமான சேவைகளுக்கு கட்டுப்பாட்டை விதித்தது. இதன் காரணமாக இந்த ஒருமாத கால நீட்டிப்பு வழங்கப்பட்டது. தற்போது இந்த மாதமும் இறுதி வரை விசா காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தூதரகம்
இந்த தகவலை இந்தியா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தூதரகங்கள் உறுதி செய்துள்ளது. இது குறித்து இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘அமீரக அரசு சுற்றுலா விசாவில் வந்தவர்கள் தங்களது விசா காலம் நிறைவடைந்திருந்தாலும், அவர்களது விசா காலம் இந்த மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சுற்றறிக்கை கிடைத்துள்ளது. மேலும் இந்த காலத்தில் எந்தவிதமான அபராதம் எதுவும் இல்லாமல் தங்கிக் கொள்ளலாம்’’ என்று கூறியுள்ளது.இந்த விசா நீட்டிக்கப்பட்டதை பல்வேறு டிராவல் ஏஜென்சி நிறுவனங்களும் உறுதி செய்துள்ளன.

இது குறித்து இந்தியாவைச் சேர்ந்த பெண் பயணி ஒருவர் கூறுகையில் ‘‘நான் எனது தந்தையை பார்க்க துபாய் வந்தேன். என்னுடன் கணவர் மற்றும் மகன் ஆகியோரும் வந்தனர். எனது விசாவானது கடந்த 25-ந் தேதி நிறைவடைந்தது. இதனால் 23-ந் தேதி சொந்த ஊர் செல்ல திட்டமிட்டேன். இந்த அறிவிப்பு காரணமாகவும், எனது தந்தைக்கு கொரோனா பாதிக்கப்பட்டதாலும் எனது பயணத்தை ஒத்தி வைத்துள்ளேன்’’ என்றார்.

Next Story