புதிய கட்சி தொடங்கும் திட்டம் இல்லை 2024 ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியா? முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் பரபரப்பு பேச்சு


புதிய கட்சி தொடங்கும் திட்டம் இல்லை 2024 ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியா? முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் பரபரப்பு பேச்சு
x
தினத்தந்தி 2 March 2021 6:00 AM GMT (Updated: 2 March 2021 6:00 AM GMT)

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் 2024-ம் ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதை சூசகமாக தெரிவித்தார். மேலும் புதிய கட்சி எதையும் தொடங்கப்போவதில்லை என திட்டவட்டமாக கூறினார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் 2-வது முறையாக போட்டியிட்ட டிரம்ப் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனிடம் தோல்வியை தழுவினார்.

ஆனால் டிரம்ப் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டி வந்தார்.

எனினும் ஜனவரி 6-ந் தேதி பெரும் கலவரத்துக்கு மத்தியில் அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக்கூட்டம் ஜோ பைடனின் வெற்றியை உறுதி செய்து அவருக்கு வெற்றி சான்றிதழ் வழங்கியது.

அதன் பின்னர் டிரம்ப் தனது தோல்வியை ஒப்புக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜனவரி 20-ந் தேதி ஜோ பைடன் பதவியேற்றார்.‌

அதன் பின்னர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறி புளோரிடா மாகாணத்தில் உள்ள தனது சொகுசு பங்களாவில் குடியேறினார்.‌

அரசியல் மாநாட்டில் பேச்சு

இந்த நிலையில் புளோரிடா மாகாணத்தின் ஆர்லாண்டோ நகரில் நடைபெற்ற கன்சர்வேட்டிவ் அரசியல் நடவடிக்கை மாநாட்டின் நிறைவு விழாவில் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் கலந்து கொண்டு உரையாற்றினார். வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறிய பிறகு டிரம்ப் கலந்து கொண்ட முதல் அரசியல் நிகழ்வு இதுவாகும். அவர் தனது உரையின் போது தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனின் கொள்கைகளை கடுமையாக விமர்சித்தார். மேலும் அவர் தான் புதிய கட்சி எதையும் தொடங்கப்போவதில்லை எனவும் தெரிவித்தார். மாநாட்டில் டிரம்ப் பேசியதாவது:-

4 ஆண்டுகளுக்கு முன்பு நாம் ஒன்றாக தொடங்கிய நம்ப முடியாத பயணம் வெகு தொலைவில் உள்ளது என்பதை அறிவிக்க நான் இன்று உங்கள் முன் நிற்கிறேன். எங்கள் இயக்கத்தின் எதிர்காலம், எங்கள் கட்சியின் எதிர்காலம், நமது அன்புக்குரிய நாட்டின் எதிர்காலம் பற்றி பேச நாம் இங்கு கூடியிருக்கிறோம்.

நான் புதிய கட்சியை தொடங்கப்போவதாக வதந்திகள் பரவுவதை அறிந்தேன். அது உண்மையல்ல. புதிய கட்சியை தொடங்கும் எந்த திட்டமும் இல்லை.

ஜனநாயகவாதிகளை தோற்கடிப்போம்

அது புத்திசாலித்தனமாக இருக்காது. நான் புதிய கட்சி தொடங்கினால் அது பழமைவாதிகளின் வாக்குகளைப் பிரிக்கும். அதில் யாருக்கும் வெற்றி கிடைக்காது. எங்களிடம் குடியரசு கட்சி உள்ளது. அது முன்னெப்போதையும் விட இனி ஒன்றுபட்டு வலுவாக இருக்கும்.

அடுத்த ஆண்டு நடைபெறும் இடைக்கால தேர்தலில் நாம் ஒன்றுபட்டு ஜனநாயகவாதிகளை தோற்கடிப்போம்.

2024-ம் ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் நாம் வெள்ளை மாளிகையை திரும்பப்பெறுவோம். நாம் செனட் சபையில் வெற்றி பெறுவோம். பின்னர் குடியரசு கட்சி தலைவர் ஒருவர் வெள்ளை மாளிகையை அலங்கரிப்பார். அது யார் என்பதில் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. யாருக்கு தெரியும் ஜனநாயகவாதிகளை 3-வது முறையாக வெல்ல நான் கூட முடிவு செய்யலாம்.‌

நாங்கள் தொடர்ந்து இருப்போம். நாங்கள் வெற்றிபெறுவோம். ஜனநாயகவாதிகளை விட நாங்கள் வலிமையானவர்கள். வரவிருக்கும் ஆண்டுகளில் அமெரிக்க சுதந்திரத்தின் ஜோதியை நாங்கள் முன்னோக்கி கொண்டு செல்வோம்.‌

வேலை வாய்ப்புகளுக்கு எதிரானது

நவீன வரலாற்றில் எந்தவொரு ஜனாதிபதியும் பெற்றிராத மிக மோசமான முதல் மாதத்தை ஜோ பைடன் பெற்றுள்ளார். புதிதாக பதவியேற்றுள்ள ஜோ பைடன் நிர்வாகம், வேலைவாய்ப்புகளுக்கு எதிரானது, குடும்பங்களுக்கு எதிரானது. அறிவியலுக்கு, பெண்களுக்கு எதிரானது.

ஜோ பைடன் நிர்வாகம் மோசமாக இருக்கும் என்று நாம் அனைவரும் அறிந்திருந்தோம். ஆனால் அது இவ்வளவு மோசமாக இருக்கும், அவர்கள் இவ்வளவு தூரம் இடதுபுறம் செல்வார்கள் என்று நம்மில் யாரும் கற்பனை கூட செய்யவில்லை.

ஒரு மாத குறுகிய காலத்தில் நாம் முதன்மை அமெரிக்கா என்ற நிலையில் இருந்து கடைநிலை அமெரிக்கா என்ற நிலையை நோக்கி சென்றுவிட்டோம்.‌

இவ்வாறு அவர் பேசினார். 

Next Story