உலகளவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக உலக சுகாதார மையம் எச்சரிக்கை


உலகளவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக உலக சுகாதார மையம் எச்சரிக்கை
x
தினத்தந்தி 3 March 2021 11:52 PM GMT (Updated: 3 March 2021 11:52 PM GMT)

நீண்ட சரிவுக்கு பின்னர் உலகளவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதாக உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜெனீவா,

சீனாவின் உகான் மாகாணத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் முறையாக கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அங்கிருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பரவி, மிக மோசமான பாதிப்புகளை கொரோனா வைரஸ் நோய்த்தொற்று ஏற்படுத்தி வருகிறது.

தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்த பிறகும் கூட கொரோனா வைரஸ் பரவல், உலகுக்கு இன்னும் அச்சுறுத்தலாகவே இருந்து வருகிறது. இதற்கிடையில் கொரோனா வைரஸ் பரவல் கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது. இதுகுறித்து உலக சுகாதார மையம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது;-

“கடந்த வாரத்தில் 26 லட்சத்துக்கும் அதிகமான புதிய பாதிப்புகள் பதிவாகி உள்ளன. இது முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் 7 சதவீத உயர்வு ஆகும். 6 வார காலம் சரிவை சந்தித்து வந்த கொரோனா பாதிப்பு இப்போது ஏற்றத்தை சந்தித்துள்ளது.

கிழக்கு மத்திய தரைக்கடல் நாடுகள் (14 சதவீதம்), தென் கிழக்கு ஆசியா (9 சதவீதம்), ஐரோப்பா (9 சதவீதம்), வட தென் அமெரிக்க நாடுகள் (6 சதவீதம்) ஆகியவற்றில் பரவல் அதிகரித்து இருப்பதே உலகளாவிய கொரோனா பாதிப்பு அதிகரிக்க காரணமாகி உள்ளது.

பொது சுகாதார, சமூக கட்டுப்பாடுகள் தளர்வு உள்ளிட்ட காரணங்களால் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் வாராந்திர கொரோனா பலி எண்ணிக்கை குறைகிறது. கடந்த வாரம் 63 ஆயிரம் புதிய இறப்புகள் பதிவாகி இருக்கின்றன. இது முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் 6 சதவீதம் குறைவு ஆகும்.”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story