அமீரக வாசிப்பு மாதத்தையொட்டி சார்ஜாவில் உள்ள நூலகங்களில் பொதுமக்கள் கட்டணமின்றி உறுப்பினர் ஆகலாம்; அதிகாரி தகவல்


அமீரக வாசிப்பு மாதத்தையொட்டி சார்ஜாவில் உள்ள நூலகங்களில் பொதுமக்கள் கட்டணமின்றி உறுப்பினர் ஆகலாம்; அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 5 March 2021 4:24 AM GMT (Updated: 5 March 2021 4:24 AM GMT)

அமீரக வாசிப்பு மாதத்தையொட்டி சார்ஜாவில் உள்ள பொது நூலகங்களில் பொதுமக்கள் கட்டணமின்றி அடிப்படை உறுப்பினர் ஆகலாம் என பொது நூலக இயக்குனர் தெரிவித்தார்.

இதுகுறித்து சார்ஜா பொது நூலக இயக்குனர் இமான் புசுலைபி கூறியதாவது:-

அமீரக வாசிப்பு மாதம்

அமீரகத்தில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் அமீரக வாசிப்பு மாதமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த மாதத்தில் ஒவ்வொரு நபரும் புத்தகங்களை வாசிக்க வேண்டும் என்பதற்காக சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சிகள் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு காணொலி வழியாக நடத்தப்படுகிறது.

குறிப்பாக இந்த மாதத்தில் கட்டணமின்றி நூலக உறுப்பினராவது மற்றும் வாசிப்பவருடன், வாசிப்பவர் என புதிதாக 2 முயற்சிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதில், நூலக உறுப்பினராவது என்பது, சார்ஜா பகுதியில் உள்ள நூலகங்களில் பொதுமக்கள் அனைவரும் கட்டணம் ஏதும் இன்றி இலவசமாக தங்களை உறுப்பினராக பதிவு செய்து கொள்ளலாம். இந்த சலுகையானது ஒரு வருடத்துக்கு இருக்கும். அடுத்த ஆண்டு (2022) ஏப்ரல் மாதம் முதல், உறுப்பினருக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும்.

ஆன்லைனிலும் நூல்களை படிக்கலாம்

இந்த முயற்சியானது ‘ஒவ்வொருவரின் நூலகம்’ என்ற அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் சார்ஜா பகுதியில் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பள்ளிக்கூடங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியியரும், பொதுமக்களும் பொதுமக்களும் உறுப்பினர்களாக சேர்ந்து பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் அரசுத்துறை ஊழியர்களும், தனியார் துறை ஊழியர்களும் இந்த திட்டத்தின் கீழ் உறுப்பினர்களாக சேருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளனர்.

இந்த உறுப்பினர்கள் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் சார்ஜாவில் உள்ள பொது நூலகங்களில் தங்களுக்கு விருப்பமான நூல்களை எடுத்து படிக்க முடியும்.

வாசகருக்கு வழங்கலாம்

2-வது முயற்சியாக ‘வாசிப்பவருடன், வாசிப்பவர்’ என்ற திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஒருவர் தான் வாசித்த நூலை சார்ஜா பொது நூலக ஊழியரின் ஒத்துழைப்புடன் மற்றொரு வாசகருக்கு வழங்கலாம். இதன் மூலம் பொதுமக்கள் தங்களிடம் உள்ள நூல்களை மற்றவர்கள் படிக்கும் வகையில் கொடுத்து உதவும் வாய்ப்பு ஏற்படும்.

இந்த வாசிப்பு மாதம் தொடர்பாக சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட பல்வேறு இணையதளம் வாயிலாகவும் கருத்துகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. அறிவு சார்ந்த சமுதாயத்தை ஏற்படுத்தும் முயற்சியாக இத்தகைய பணிகள் நடக்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story