மியான்மரில் ராணுவ ஆட்சி: ராணுவத்துக்கு எதிராக தீவிரமடையும் போராட்டம்


மியான்மரில் ராணுவ ஆட்சி: ராணுவத்துக்கு எதிராக தீவிரமடையும் போராட்டம்
x
தினத்தந்தி 5 March 2021 11:27 AM GMT (Updated: 5 March 2021 11:27 AM GMT)

அண்டை நாடான மியான்மரில் கடந்த பிப்ரவரி 1-ந்தேதி ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து ராணுவத்துக்கு எதிராக அங்கு தீவிர போராட்டங்கள் நடந்து வருகின்றன.

மியான்மர்,

மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை ராணுவம் கடந்த 1-ந்தேதி கவிழ்த்துவிட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. மேலும் அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களை கைது செய்து தடுப்புக் காவலில் வைத்துள்ளது. மியான்மர் ராணுவத்தின் இந்த நடவடிக்கைக்கு உலகின் பெரும்பாலான நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. குறிப்பாக அமெரிக்கா, மியான்மர் ராணுவத்தை வன்மையாக கண்டித்ததோடு மட்டுமல்லாமல் ராணுவ தலைவர்கள் மீது பொருளாதார தடைகளையும் விதித்தது.

இதற்கிடையில் மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான மக்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து அதேசமயம் மியான்மர் ராணுவம் இந்த போராட்டத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க முயற்சித்து வருகிறது. இதைத்தொடர்ந்து ராணுவத்துக்கு எதிராக அங்கு தீவிர போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதில் 50-க்கும் மேற்பட்டோர் இதுவரை கொல்லப்பட்டு இருக்கின்றனர்.

இந்த நிலையில் மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தில் ஒரே நாளில் 38 பேர் கண்மூடித்தனமாக சுட்டு கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யாங்கூன் உட்பட பல நகரங்களில் வீதிகள் ரத்த வெள்ளத்தில் காட்சியளிக்கின்றன. இவற்றை வெளி கொண்டு வர முயற்சிக்கும் பத்திரிக்கையாளர்களும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில், ரத்த வெள்ளத்தில் கிடக்கும் சடலங்களை ராணுவத்தினர் இழுத்து செல்லும் காட்சியை மக்கள் தங்கள் வீடுகளில் இருந்தவாறு வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளன. இரக்கமற்ற முறையில் தீவிரவாத செயலில் ஈடுபட்டு வரும் ராணுவத்தினரை தடுக்க உலக நாடுகள் முன்வர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

அப்பாவி மக்களை கொன்று குவிப்பதையும், சிறையில் அடைப்பதையும் மியான்மர் ராணுவம் நிறுத்தி கொள்ள வேண்டும் என்று ஐநாவின் மனித உரிமை ஆணையம் எச்சரித்துள்ளது. 

Next Story