உலக செய்திகள்

இந்திய வம்சாவளியினர் அமெரிக்காவில் ஆதிக்கம் செலுத்துகின்றனர் - அதிபர் ஜோ பைடன் பாராட்டு + "||" + People of Indian descent taking over the United States - says President Joe Biden

இந்திய வம்சாவளியினர் அமெரிக்காவில் ஆதிக்கம் செலுத்துகின்றனர் - அதிபர் ஜோ பைடன் பாராட்டு

இந்திய வம்சாவளியினர் அமெரிக்காவில் ஆதிக்கம் செலுத்துகின்றனர் - அதிபர் ஜோ பைடன் பாராட்டு
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்,

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா அனுப்பிய ‘பெர்செவரன்ஸ்’ விண்கலம் கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இந்த விண்கலத்தை கட்டுப்படுத்தும் குழுவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த விஞ்ஞானி சுவாதி மோகன் முக்கிய பங்காற்றினார். 

இந்த நிலையில் நாசா விஞ்ஞானிகளுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் காணொலி காட்சி மூலமாக உரையாற்றினார். அப்போது அவர் அமெரிக்க வாழ் இந்தியர்களை வெகுவாக பாராட்டினார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கர்கள் அந்நாட்டில் ஆதிக்கம் செலுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக நாசா விஞ்ஞானி சுவாதி மோகன் காணொலி காட்சி மூலம் அதிபர் ஜோ பைடனுடன் பேசிய போது, “விண்கலம் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்குவதற்கு முந்தைய சில நாட்கள் மிகவும் சீராக இருந்தது. ஆனால் அந்த இறுதி ஏழு நிமிடங்கள் மிகவும் பதட்டமாக இருந்தது. அனைத்தையும் கடந்து செவ்வாய் கிரகத்தில் நமது விண்கலம் தரையிறங்கியது ஒரு கனவு போல் உள்ளது.

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்களின் வாழ்ந்ததற்கான சாத்தியக்கூறுகளை ‘பெர்செவரன்ஸ்’ விண்கலம் மூலம் நம்மால் கண்டறிய முடியும் என நம்புகிறோம். எங்களுடன் நேரம் செலவிட்டு பேசியதற்கு நன்றி” என்று தெரிவித்தார்.

இதையடுத்து அதிபர் ஜோ பைடன் பேசிய போது, “நமது நாட்டில் தற்போது இந்திய வம்சாவளியினர் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். நீங்கள் (சுவாதி மோகன்), என்னுடைய துணை அதிபர் கமலா ஹாரீஸ் மற்றும் என்னுடைய பேச்சை எழுதி தரும் வினய் ரெட்டி ஆகியோர் மிகவும் சிறப்பாக செயல்படுகிறீர்கள்.

இது ஒரு பெருமைமிகு தருணமாகும். பல லட்சம் குழந்தைகள் மற்றும் இளம் தலைமுறையினரின் கனவுகளுக்கு நீங்கள் நம்பிக்கை அளித்துள்ளீர்கள். அமெரிக்காவின் சிறப்பு என்னவென்றால், இந்த நாட்டில் பல கலாச்சாரங்களின் சிறப்பை நாம் வெளிக்கொண்டு வருகிறோம் என்பது தான். 

நீங்கள் அறிவியல் மீது நம்பிக்கை கொண்டு, கடின உழைப்பு மற்றும் மனதை ஒன்றிணைத்தல் ஆகியவற்றின் மூலம் நம்மால் செய்ய முடியாதது எதுவும் இல்லை என்பதை நிரூபித்துள்ளீர்கள். உங்கள் அனைவருக்கும் நன்றி” என்று தெரிவித்தார். ஜோபைடன் நிர்வாகத்தில் முக்கிய பொறுப்புகளில் 55 அமெரிக்க வாழ் இந்தியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.