காஷ்மீர் பிரச்சினை குறித்து இந்தியா, பாகிஸ்தான் நேரடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் - அமெரிக்கா வலியுறுத்தல்


காஷ்மீர் பிரச்சினை குறித்து இந்தியா, பாகிஸ்தான் நேரடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் - அமெரிக்கா வலியுறுத்தல்
x
தினத்தந்தி 5 March 2021 10:36 PM GMT (Updated: 5 March 2021 10:36 PM GMT)

காஷ்மீர் உள்பட எல்லா பிரச்சினைகள் குறித்தும் இந்தியாவும், பாகிஸ்தானும் நேரடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

வாஷிங்டன்,

இந்தியா-பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குனர்கள் இடையே கடந்த மாதம் 25-ந்தேதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், போர் நிறுத்த ஒப்பந்தம் உள்பட அனைத்து ஒப்பந்தங்களையும் முழுமையாக கடைப்பிடிக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. இந்தநிலையில், நேற்று முன்தினம் இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் நெட் பிரைசிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது:-

இந்தியா, பாகிஸ்தான் பிராந்தியத்தை பொறுத்தவரை, அமெரிக்காவின் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை. காஷ்மீர் நிலவரத்தை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.

எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பதற்றத்தை தணிக்க வேண்டும் என்றும், 2003-ம் ஆண்டின் போர் நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாக கடைப்பிடிக்குமாறும் இருதரப்பையும் கேட்டுக்கொள்கிறோம். எல்லை கட்டுப்பாட்டு கோடு வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சிப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். காஷ்மீர் உள்பட எல்லா பிரச்சினைகள் குறித்தும் இந்தியாவும், பாகிஸ்தானும் நேரடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story