ராணுவ பட்ஜெட்டை ரூ.15 லட்சம் கோடியாக உயர்த்தியது சீனா இந்தியாவை விட 3 மடங்கு அதிகம்


ராணுவ பட்ஜெட்டை ரூ.15 லட்சம் கோடியாக உயர்த்தியது சீனா இந்தியாவை விட 3 மடங்கு அதிகம்
x
தினத்தந்தி 6 March 2021 12:21 AM GMT (Updated: 6 March 2021 12:21 AM GMT)

சீனா தனது ராணுவ பட்ஜெட்டை ரூ.15 லட்சம் கோடியாக உயர்த்தி உள்ளது. இது இந்தியாவை விட 3 மடங்கு அதிகமாகும்.

பீஜிங்,

உலகிலேயே ராணுவத்துக்கு அதிக செலவு செய்யும் நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக சீனா 2-வது இடத்தில் உள்ளது. 20 லட்சம் வீரர்களுடன் சீன ராணுவம் உலகின் பெரிய ராணுவமாக திகழ்கிறது.

இந்த நிலையில், 2021-ம் ஆண்டுக்கான ராணுவ பட்ஜெட்டை 6.8 சதவீதத்துக்கு சீனா உயர்த்தி உள்ளது. அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட வரைவு பட்ஜெட்டில் ராணுவத்துக்கு 209 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.15 லட்சத்து 26 ஆயிரத்து 504 கோடி) ஒதுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது கடந்த ஆண்டை விட 6.8 சதவீதம் அதிகம் ஆகும். கிழக்கு லடாக்கில் இந்தியாவுடனான ராணுவ மோதல் மற்றும் அமெரிக்காவுடன் வளர்ந்து வரும் அரசியல் மற்றும் ராணுவ பதற்றங்களுக்கு மத்தியில் சீனா தனது ராணுவ பட்ஜெட்டை முதல் முறையாக 200 மில்லியன் டாலருக்கும் அதிகமாக உயர்த்தியுள்ளது.

சீன ராணுவத்தின் தற்போதைய பட்ஜெட் அமெரிக்க ராணுவ பட்ஜெட்டில் 4-ல் ஒரு பங்குக்கு நிகராகும். 2021 ம் ஆண்டுக்கான அமெரிக்க ராணுவ பட்ஜெட் 740.5 பில்லியன் டாலர்கள் (சுமார் ரூ.54 லட்சத்து 75 ஆயிரம் கோடி) ஆகும்.‌

அதேசமயம் இந்தியாவுடன் ஒப்பிடுகையில் சீன ராணுவத்தின் தற்போதைய பட்ஜெட் இந்திய ராணுவ பட்ஜெட்டை விட 3 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் இந்த ஆண்டுக்கான ராணுவ பட்ஜெட் 65.7 பில்லியன் டாலராக (சுமார் ரூ.4 லட்சத்து 79 ஆயிரம் கோடி) ஒதுக்கப்பட்டுள்ளது.

ராணுவ பட்ஜெட்டை உயர்த்தியது குறித்து சீன நாடாளுமன்றத்தில் பேசிய அந்த நாட்டின் பிரதமர் லீ கெகியாங் ‘‘கடந்த ஆண்டு தேசிய பாதுகாப்பு மற்றும் ஆயுதப் படைகளின் வளர்ச்சி பெரும் வெற்றி பெற்றது. நமது படைகள் முழுத் திறமையுடனும் சிறந்த நடத்தையுடனும் சீனாவின் தேசிய பாதுகாப்பை பாதுகாத்ததோடு, தொற்றுநோய் கட்டுப்பாட்டிலும் பங்கேற்றன’’ என்றார்.

மேலும் அவர் ‘‘ராணுவ பட்ஜெட்டை உயர்த்துவதன் முக்கிய நோக்கம் அனைத்து பகுதிகளிலும் மற்றும் அனைத்து சூழ்நிலைகளிலும் பாதுகாப்பு அபாயங்களுக்கு பதில் அளிப்பதற்கான ஒட்டுமொத்த திட்டங்களை உருவாக்குதல் மற்றும் நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு நலன்களைப் பாதுகாப்பதற்கான ராணுவத்தின் திறனை மேம்படுத்துதல் ஆகியவையே ஆகும்’’ என கூறினார்.

இதனிடையே சீனா ராணுவ பட்ஜெட்டை உயர்த்துவது எந்த ஒரு நாட்டையும் அச்சுறுத்துவதற்காக அல்ல என சீன நாடாளுமன்றத்தின் செய்தி தொடர்பாளர் ஜாங் யேசுய் கூறினார்.

இதுகுறித்து அவர் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், ‘‘தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான சீனாவின் முயற்சிகள் எந்த நாட்டையும் குறிவைக்கவோ, அச்சுறுத்தவோ இல்லை. ஒரு நாடு மற்றவர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறதா என்பது அது எந்தவகையான பாதுகாப்பு கொள்கையைப் பின்பற்றுகிறது என்பதை பொறுத்தது. சீனா அமைதியான வளர்ச்சியின் பாதையில் உறுதியாக உள்ளது. இயல்பாக தற்காப்புடன் இருக்கும் பாதுகாப்பு கொள்கையை சீனா பின்பற்றுகிறது’’ என கூறினார்.


Next Story