துபாயில், உலகின் மிகப்பெரிய பேரீச்சை தொழிற்சாலை அடுத்த ஆண்டு திறக்கப்படுகிறது


துபாயில், உலகின் மிகப்பெரிய பேரீச்சை தொழிற்சாலை அடுத்த ஆண்டு திறக்கப்படுகிறது
x
தினத்தந்தி 7 March 2021 10:28 PM GMT (Updated: 7 March 2021 10:28 PM GMT)

துபாயில் உலகின் மிகப்பெரிய பேரீச்சை தொழிற்சாலை அடுத்த ஆண்டு திறக்கப்படுகிறது. இது குறித்து அல் பரக்கா பேரீச்சை நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

துபாய்,

ஐக்கிய அரபு அமீரகம் பேரீச்சை தொழிலில் உலகில் மிகவும் முக்கியமான இடத்தை வகித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு துபாய் தொழில் நகரத்தில், உலகின் மிகப்பெரிய பேரீச்சை தொழிற்சாலை ஏற்படுத்தப்படுகிறது.

தற்போது இந்த தொழிற்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு(2022) ஆரம்பத்தில் இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்து அந்த ஆண்டே திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தொழிற்சாலை அமையும்போது துபாயில் பேரீச்சை தயாரிப்பு பணியானது தற்போது இருந்து வரும் அளவை விட இரு மடங்காகும். இதன் மூலம் உலகின் மிகப்பெரிய பேரீச்சை தொழிற்சாலை என்ற பெருமையை இந்த தொழிற்சாலையானது பெறும்.

இந்த புதிய தொழிற்சாலையின் மூலம் அமீரகத்தில் ஒவ்வொரு ஆண்டும் உற்பத்தி செய்யப்படும் பேரீச்சையின் விளைச்சலானது ஒரு லட்சம் டன்னுக்கும் மேல் அதிகரிக்கும். அமீரகத்தில் தற்போது பேரீச்சை உற்பத்தியானது 65 ஆயிரம் டன் ஆக இருந்து வருகிறது.

பேரீச்சையில் இருந்து கிடைக்கும் சர்பத், ஜாம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் உடல் நலத்துக்கு மிகவும் இன்றியமையாததாக இருக்கிறது.

இந்த புதிய தொழிற்சாலையானது 6 லட்சம் சதுர அடி பரப்பளவில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் தனது பணிகளை மேற்கொள்ளும். குறிப்பாக மின்சார தேவைக்காக சூரிய ஒளி சக்தி பேனல்கள் பதிக்கப்படும்.

உலகில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பேரீச்சை தேவையை நிறைவு செய்ய இந்த தொழிற்சாலையின் பங்களிப்பு மிகவும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் அமீரகத்தில் இருந்து இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் பேரீச்சை ஏற்றுமதி அதிகரிக்கும்.

இவ்வாறு அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.


Next Story