அமீரகத்தில் ஆண்களை விட பெண்களே சிறப்பாக வாகனம் ஓட்டுகின்றனர் ஆய்வில் தகவல்


அமீரகத்தில் ஆண்களை விட பெண்களே சிறப்பாக வாகனம் ஓட்டுகின்றனர் ஆய்வில் தகவல்
x
தினத்தந்தி 8 March 2021 12:10 AM GMT (Updated: 8 March 2021 12:10 AM GMT)

அமீரகத்தில் ஆண்களை விட பெண்களே சிறப்பான வாகனங்கள் ஓட்டுகின்றனர் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபாய்,

சர்வதேச பெண்கள் தினம் இன்று (திங்கட்கிழமை) உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில், சமீபத்தில் செய்யப்பட்ட ஆய்வில், அமீரகத்தில் ஆண்களை விட பெண்களே சிறப்பாக வாகனம் ஓட்டுகின்றனர் என்று தெரியவந்துள்ளது. அமீரகத்தை பொறுத்த வரையில் ஆண்களும், பெண்களும் சொந்தமாக வாகனங்களை வைத்து ஓட்டி வருகின்றனர். ஆனால் ஆண்களை விட பெண்கள் மிகவும் குறைவாகவே விபத்துகளை ஏற்படுத்தியுள்ளனர்.

மேலும் சாலை போக்குவரத்து விதிமுறைகளை முறையாக மதித்து நடக்கின்றனர். குழந்தைகளை வாகனங்களில் ஏற்றிச் செல்லும் போது சீட் பெல்ட்களை முறையாக பயன்படுத்துகின்றனர். பாதுகாப்பான வகையில் வாகனங்களை ஓட்டிச் செல்வதில் அதிக கவனம் செலுத்துகின்றனர்.

கடந்த ஆண்டில், ஆண்கள் 26 சதவீத விபத்துகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், பெண்கள் 21 சதவீதம் மட்டுமே விபத்துகள் ஏற்படுத்தியுள்ளனர். மேலும் கடந்த 6 ஆண்டுகளாக கண்காணிக்கப்பட்டு வரும் சாலை விபத்துக்களில் பெண்கள் ஏற்படுத்திய விபத்துகள் மிகவும் குறைவானதாகும்.

வாகனங்களை ஓட்டிச் செல்லும் போது அடுத்தவர்களுக்கு ஆபத்தான வகையில் ஆண்கள் அதிகமாக வழித்தடத்தை மாற்றிச் செல்கின்றனர். இதுபோன்ற செயல்களை பெண் டிரைவர்கள் 67 சதவீதம் செய்வதில்லை. ஆனால் ஆண்களில் 56 சதவீதம் பேர் மட்டும் இத்தகைய செயல்களில் ஈடுபடாமல் உள்ளனர்.

வாகனங்களை ஓட்டிச் செல்லும் போது வழித்தடத்தை மாற்றும் போது சிக்னல்கள் கொடுக்கும் பழக்கத்தை 71 சதவீதம் பெண்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இத்தகைய பழக்கத்தை ஆண்கள் 65 சதவீதம் மட்டுமே பின்பற்றுகின்றனர்.

வாகனங்களை பாதுகாப்பாக ஓட்டிச் செல்ல சீட் பெல்ட் அணிவது மிகவும் அவசியம் ஆகும். இந்த சீட் பெல்ட்களை அணிவதில் பெண்கள் 94 சதவீதமும், ஆண்கள் 91 சதவீதமும் கவனம் செலுத்துகின்றனர்.

வாகனங்களை ஓட்டிச் செல்லும் போது மொபைல் போன்களை பயன்படுத்தக் கூடாது. இதில் ஆண்களும், பெண்களும் விதிவிலக்கல்ல. எனினும் பெண்களில் 36 சதவீதம் பேர் வாகனங்களை ஓட்டிச் செல்லும் போது மொபைல் போன்களை பயன்படுத்துவதில்லை. ஆண்களில் 23 சதவீதம் பேர் மொபைல் போன்களை பயன்படுத்துவதில்லை.

இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story