அமெரிக்காவின் தொடர்பு முயற்சிகளுக்கு வடகொரியா பதில் அளிக்கவில்லை; ஜோ பைடன் நிர்வாகம் குற்றச்சாட்டு


அமெரிக்காவின் தொடர்பு முயற்சிகளுக்கு வடகொரியா பதில் அளிக்கவில்லை; ஜோ பைடன் நிர்வாகம் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 14 March 2021 5:43 PM GMT (Updated: 14 March 2021 5:43 PM GMT)

அணு ஆயுத விவகாரத்தில் அமெரிக்காவுக்கும் வட கொரியாவுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நீடிக்கிறது.

இதற்கு தீர்வுக்கான அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டிரம்பும் வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னும் 3 முறை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.‌ ஆனால் இந்தப் பேச்சுவார்த்தைகள் பெரிய அளவில் பயனளிக்காததால் இரு நாடுகளின் உறவில் தொடர்ந்து பதற்றமான சூழலே நீடிக்கிறது.

இந்த சூழலில் அமெரிக்காவில் அண்மையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவி ஏற்றார். இந்த நிலையில் வட கொரியாவுடனான பதற்றம் அதிகரிப்பதை தடுப்பதற்கு பல்வேறு வழிகளில் அந்த நாட்டை தொடர்பு கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் ஆனால் வட கொரியா அவற்றுக்கு பதில் அளிக்கவில்லை என்றும் ஜோ பைடன் நிர்வாகம் குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து ஜோ பைடன் நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில் ‘‘பதற்றம் அதிகரிப்பதன் அபாயங்களை குறைக்க பிப்ரவரி மாத நடுப்பகுதியில் நியூயார்க்கில் உள்ள வட கொரியா தூதரகம் உள்பட பல்வேறு வழிமுறைகளில் வடகொரியா அரசாங்கத்தை அணுகினோம். ஆனால் வட கொரியாவில் இருந்து எங்களுக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. அமெரிக்கா இப்போது வட கொரியா மீதான கொள்கையை மறுபரிசீலனை செய்து வருகிறது. மேலும் வட கொரியாவில் முன்வைக்கப்படும் அச்சுறுத்தல்கள் என்று கருதப்படும் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்கான விருப்பங்களை மதிப்பீடு செய்து வருகிறது’’ என கூறினார்.

 


Next Story