மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான புரட்சியை முன்னெடுப்பதாக துணை அதிபர் உறுதி; மக்களும் கைகோர்க்க அழைப்பு


துணை அதிபர் மான் வின் கைங் தான்
x
துணை அதிபர் மான் வின் கைங் தான்
தினத்தந்தி 14 March 2021 5:57 PM GMT (Updated: 14 March 2021 5:57 PM GMT)

தலைமறைவாக உள்ள மியான்மர் நாட்டின் துணை அதிபர், ராணுவ ஆட்சிக்கு எதிரான புரட்சியை முன்னெடுப்பதாக உறுதியளித்துள்ளதோடு அதில் மக்கள் கைகோர்க்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார்.

மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது
மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான ஆளும் ஜனநாயகத்துக்கான தேசிய லீக் கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது.ஆனால் இந்த வெற்றி முறைகேடாக பெறப்பட்டது என குற்றம்சாட்டி வந்த அந்த நாட்டு ராணுவம் கடந்த மாதம் 1-ந் தேதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கவிழ்த்துவிட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.அது மட்டுமின்றி நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் என ஆளும் கட்சியைச் சேர்ந்த முக்கிய அரசியல் தலைவர்கள் பலரையும் ராணுவம் அதிரடியாக கைது செய்தது.கடந்த 5 வாரங்களுக்கும் மேலாக ரகசியமான இடத்தில் சிறை வைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகி மீது ராணுவம் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி கோர்ட்டில் விசாரணை நடத்தி வருகிறது.‌

தலைமறைவானதுணை அதிபர்
இதனிடையே ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஆளும் கட்சி தலைவர்கள் பலரையும் ராணுவம் கைது செய்து சிறை வைத்துள்ள அதேவேளையில் துணை அதிபர் மான் வின் கைங் தான் மற்றும் ஆளும் கட்சி எம்.பி.க்கள் பலர் ராணுவத்திடம் இருந்து தப்பி தலைமறைவாகினர்.அதனை தொடர்ந்து ராணுவத்திடம் இருந்து தப்பிய ஆளும் கட்சி எம்.பி.க்கள் பைடாங்சு ஹுலுட்டாவ் (மியான்மர் நாடாளுமன்றம்) பிரதிநிதிகள் குழு (சி.ஆர்.பி.எச்) என்கிற குழுவை தொடங்கினர். இந்தக் குழுவின் தலைவராக (பொறுப்பு) மான் வின் கைங் தான் உள்ளார்.இந்த சி.ஆர்.பி.எச். மியான்மரின் மக்களாட்சி அரசாக சர்வதேச அங்கீகாரத்தை நாடுகிறது.ஆனால் மியான்மர் ராணுவம் சி.ஆர்.பி.எச்-சை சட்ட விரோத குழுவாக கருதுகிறது. அந்த குழுவுடன் ஒத்துழைக்கும் எவரும் தேசத்துரோக குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ள நேரிடும் என்றும் ராணுவம் எச்சரிக்கிறது.

புரட்சியை முன்னெடுப்பதாக உறுதி
இந்தநிலையில் தலைமறைவாக உள்ள துணை அதிபர் மான் வின் கைங் தான் ஆட்சிக் கவிழ்ப்புக்கு பிறகு முதல் முறையாக நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் ராணுவ ஆட்சிக்கு எதிராக புரட்சியை முன்னெடுப்பதாக உறுதியளித்ததோடு அதில் மக்கள் கைகோர்க்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார். பேஸ்புக்கில் வெளியிட்ட வீடியோ பதிவில் அவர் கூறியதாவது:-

இருண்ட தருணங்களுக்கு எதிராக நமது குடிமக்கள் தங்கள் எதிர்ப்பை சோதிக்க வேண்டிய நேரம் இது.பல தசாப்தங்களாக சர்வாதிகாரத்தில் இருந்து பல்வேறு வகையான அடக்குமுறைகளை அனுபவித்து வரும் அனைத்து இன சகோதரர்களும் ஒரு கூட்டாட்சி ஜனநாயகத்தை உருவாக்குவதற்காக புரட்சி செய்ய வேண்டும். இந்தப் புரட்சி தான் நமது முயற்சிகளை ஒன்றாக இணைக்க முடியும்.

துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் சாவு
கடந்த காலங்களில் நம்மிடையே வேறுபாடுகள் இருந்தபோதிலும் நமது அனைவரின் நன்மைக்காக சர்வாதிகாரத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு நாம் கைகளை ஒன்றாக இணைக்க வேண்டிய நேரம் இது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையில் ராணுவ ஆட்சிக்கு எதிரான மக்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. அதேவேளையில் ராணுவமும் போராட்டக்காரர்கள் மீதான தங்களது அடக்குமுறையை மேலும் தீவிரப்படுத்தி உள்ளது.துப்பாக்கிச் சூடு நடத்தி போராட்டக்காரர்களை விரட்டியடிப்பதை ராணுவம் வழக்கமாகியுள்ளது.அந்தவகையில் நேற்று முன்தினம் மியான்மரின் முக்கிய நகரங்களான யாங்கூன், மாண்டலே உள்ளிட்ட நகரங்களில் போராட்டக்காரர்கள் மீது ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

Next Story