இஸ்ரேலில் நாடாளுமன்ற தேர்தல்; பெஞ்சமின் நேட்டன்யாஹூ மீண்டும் பிரதமர் ஆவாரா?


பெஞ்சமின் நேட்டன்யாஹூ
x
பெஞ்சமின் நேட்டன்யாஹூ
தினத்தந்தி 22 March 2021 4:25 PM GMT (Updated: 22 March 2021 4:25 PM GMT)

இஸ்ரேலில் 2 ஆண்டுகளில் 4-வது முறையாக மீண்டும் நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது.‌ இதில் வெற்றி பெற்று பெஞ்சமின் நேட்டன்யாஹூ மீண்டும் பிரதமர் ஆவாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

12 ஆண்டுகளாக பிரதமர்

இஸ்ரேலில் கடந்த 12 ஆண்டுகளாக பிரதமராக இருந்து வருபவர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ.

அங்கு கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூவின் லிக்குட் கட்சி வெற்றி பெற்றபோதிலும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் அதே ஆண்டு செப்டம்பர் மாதம் 2-வது முறையாக நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. ஆனால் இந்த தேர்தலிலும் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

எனவே எதிர்க்கட்சியுடன் சேர்ந்து ஒற்றுமை அரசாங்கத்தை நிறுவ பெஞ்சமின் நேட்டன்யாஹூ முடிவு செய்தார். இதற்காக புளு அண்ட் ஒயிட் கட்சியின் தலைவரும், முன்னாள் ராணுவ தளபதியுமான பென்னிட் கான்ட்சுடன் பெஞ்சமின் நேட்டன்யாஹூ பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் ஒற்றுமை அரசில் யார் பிரதமராக இருப்பது என்பதில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவியது. இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. எனவே 3-வது முறையாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் மீண்டும் நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. ஆனால் இதிலும் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

பெஞ்சமின் நேட்டன்யாஹூ அரசு கலைந்தது

எனினும் நீண்ட இழுபறிக்குப் பிறகு லிக்குட் மற்றும் புளு அண்ட் ஒயிட் கட்சியில் கூட்டணியில் ஒற்றுமை அரசு நிறுவப்பட்டது. முதல் 18 மாதங்களுக்கு பெஞ்சமின் நேட்டன்யாஹூவும் அடுத்த 18 மாதங்களுக்கு பென்னி கான்ட்சும் பிரதமராக இருக்க ஒப்பந்தம் போடப்பட்டது.‌அதன்படி பெஞ்சமின் நேட்டன்யாஹூ பிரதமராக பதவி ஏற்றார்.

இந்த சூழலில் கூட்டணியில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக நாடாளுமன்றத்தின் பட்ஜெட் தாக்கல் செய்வது தாமதமானது.‌ இதனால் பெஞ்சமின் நேட்டன்யாஹூ தலைமையிலான அரசு கவிழ்ந்தது.‌ இதனைத் தொடர்ந்து அங்கு மீண்டும் பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.அதன்படி 2 வருடத்தில் 4-வது முறையாக இஸ்ரேலில் பொதுத்தேர்தல் நடக்கிறது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் தடுப்பூசி திட்டத்தை வெற்றிகரமாக தொடங்கிவைத்தது மற்றும் அரபு நாடுகளுடனான தூதரக அணுகுமுறையில் மாற்றம் கொண்டு வந்தது போன்ற காரணங்களால் மக்கள் தனக்கு வெற்றி வாய்ப்பை வழங்குவார்கள் என பெஞ்சமின் நேட்டன்யாஹூ உறுதியாக நம்புகிறார்.

குறைவான வாக்குகளே பதிவாகும்

அதே சமயம் தனக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் மீது கோர்ட்டில் விசாரணை நடந்து வரும் நிலையிலும், நாட்டில் அரசு எதிர்ப்பு போராட்டங்கள் வலுப்பெற்று வரும் சூழலிலும் பெஞ்சமின் நேட்டன்யாஹூ இந்த தேர்தலை எதிர்கொள்கிறார்.கடந்த ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் பதிவான 71 சதவீத வாக்குகளை விட மிகக்குறைவான வாக்குகளே இம்முறை பதிவாகும் என்று தேர்தல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் குறித்த அச்சம் மற்றும் வாக்காளர்களின் போது சோர்வு இதற்கு முக்கிய காரணமாக அமையும் என்று அவர்கள் நம்புகின்றனர்.எனினும் கொரோனா வைரஸ் காரணமாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் பல சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

நோய்வாய்ப்பட்ட மற்றும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள நபர்கள் வாக்களிப்பதற்காக தனி வாக்குச சாவடிகள் மற்றும் நகரும் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.இதுதவிர முக கவசம் அணிதல் சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் கிருமி நாசினி கொண்டு சுத்தம் போன்ற அனைத்து விதமான கொரோனா கட்டுப்பாடுகளும் முறையாக கடைபிடிக்கப்பட்டு வாக்கு பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


Next Story