அமெரிக்காவில் பரபரப்பு சூப்பர் மார்க்கெட்டுக்குள் புகுந்து சரமாரி துப்பாக்கிச்சூடு போலீஸ் அதிகாரி உள்பட 10 பேர் சாவு


அமெரிக்காவில் பரபரப்பு சூப்பர் மார்க்கெட்டுக்குள் புகுந்து சரமாரி துப்பாக்கிச்சூடு போலீஸ் அதிகாரி உள்பட 10 பேர் சாவு
x
தினத்தந்தி 23 March 2021 8:23 PM GMT (Updated: 23 March 2021 8:23 PM GMT)

அமெரிக்காவில் சூப்பர் மார்க்கெட்டுக்குள் மர்ம நபர் புகுந்து சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் போலீஸ் அதிகாரி உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்

வாஷிங்டன், 

அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளாக துப்பாக்கி கலாசாரம் பெருகி வருகிறது. போலீசாரை குறிவைத்தும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் தொடர் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

பெருகிவரும் துப்பாக்கி கலாசாரத்துக்கு எதிராக எதிர்ப்பு குரல்கள் வலுத்து வருகின்றன. துப்பாக்கி வினியோகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் நீண்ட காலமாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனாலும் அரசு தரப்பில் இதுவரை எந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படாததால் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன.

கடந்த வாரம் ஜார்ஜியா மாகாணத்தின் தலைநகர் அட்லாண்டாவில் உள்ள 3 மசாஜ் பார்லர்களில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஆசிய வம்சாவளியைச் சேர்ந்த 6 பெண்கள் உள்பட 8 பேர் கொல்லப்பட்டனர்.‌

சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கிச்சூடு

நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று முன்தினம் கொலராடோ மாகாணத்தில் நடந்த துப்பாக்கி சூடு அமெரிக்காவை மீண்டும் அதிர வைத்துள்ளது.

கொலராடோ மாகாணத்தின் வடக்கு பகுதியில் போல்டர் நகரில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் நேற்று முன்தினம் மதியம் ஏராளமான வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டிருந்தனர். அப்போது கையில் துப்பாக்கியுடன் சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுடத் தொடங்கினார்.‌

இதனால் அங்கு பெரும் பதற்றமும் பீதியும் உருவானது. சூப்பர் மார்க்கெட் ஊழியர்களும் வாடிக்கையாளர்களும் தங்களின் உயிரை காப்பாற்றிக்கொள்ள நாலாபுறமும் ஓட்டம் பிடித்தனர். ஆனாலும் அந்த மர்ம நபர் சற்றும் ஈவு இரக்கமின்றி தன் கண்ணில் பட்டவர்களையெல்லாம் குருவியை சுடுவதுபோல் சுட்டுத்தள்ளினார்.

யூடியூப்-ல் நேரலையாக ஒளிபரப்பினர்

இதற்கிடையில் சூப்பர் மார்க்கெட்டுக்குள் இருந்த சிலர் இந்த துப்பாக்கிச்சூட்டை தங்களது செல்போன்களில் படம் பிடித்து யூடியூப்-ல் நேரலையாக ஒளிபரப்பினர். இதனை தொடர்ந்து அந்த சூப்பர் மார்க்கெட்டுக்கு அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரி ஒருவர் உடனடியாக அங்கு விரைந்தார். ஆனால் அந்த மர்ம நபர் அவரையும் சுட்டு வீழ்த்தினார்.

இதையடுத்து போல்டர் நகர போலீசார் மற்றும் ஸ்வாட் அதிரடிப்படை வீரர்கள் அங்கு விரைந்து சூப்பர் மார்க்கெட்டை சுற்றிவளைத்து, தங்களின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.

அதன் பின்னர் போலீசார் இந்த பகுதி முழுவதும் தங்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் எனவே துப்பாக்கியை ஒப்படைத்து விட்டு சரணடைந்து விடும்படியும் ஒலிபெருக்கி மூலம் அந்த மர்ம நபரை எச்சரித்தனர். ஆனால் அவர் அதற்கு செவி சாய்க்காமல் சூப்பர் மார்க்கெட்டுக்குள் இருந்தபடி போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.

போலீஸ் அதிகாரி உள்பட 10 பேர் சாவு

அதனைத்தொடர்ந்து போலீசாரும் தங்களது துப்பாக்கிகளால் அவருக்கு பதிலடி கொடுத்தனர்.‌ நீண்ட நேரம் இந்த துப்பாக்கி சண்டை நீடித்தது.

இறுதியில் போலீசார் சுட்டதில் அந்த மர்ம நபரின் உடலில் துப்பாக்கி குண்டுகள் துளைத்து அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். உடனடியாக போலீசார் சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைந்து அவரை கைது செய்தனர்.

இதனிடையே அந்த மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் போலீஸ் அதிகாரி ஒருவர் உள்பட 10 பேர் பலியானது தெரியவந்தது. சூப்பர் மார்க்கெட்டுக்குள் ரத்த வெள்ளத்தில் கிடந்த 10 பேரின் உடல்களை போலீசார் மீட்டனர்.‌

இதனிடையே போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த அந்த மர்ம நபர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது பெயர் உள்ளிட்ட எந்த விவரங்களையும் தெரிவிக்க போலீசார் சிகிச்சைக்கு பிறகு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு முழுமையான தகவல்கள் வெளியிடப்படும் என கூறினர்.

Next Story