கோவேக்சின் தடுப்பூசி பயன்பாட்டுக்கு பிரேசில் அரசு தடை


கோவேக்சின் தடுப்பூசி பயன்பாட்டுக்கு பிரேசில் அரசு தடை
x
தினத்தந்தி 1 April 2021 6:30 PM GMT (Updated: 1 April 2021 6:30 PM GMT)

பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் கோவேக்சின் தடுப்பூசிக்கு பிரேசில் அரசு தடை விதித்துள்ளது.

ரியோடி ஜெனிரோ,

கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கு எதிராக உலகம் முழுவதும் பல்வேறு மருந்து நிறுவனங்கள், தடுப்பு மருந்துகளை உற்பத்தி செய்து வருகின்றன. உலக சுகாதார மையத்தின் அங்கீகாரம் பெற்ற பிறகு, இந்த தடுப்பு மருந்துகள் பொதுமக்களுக்கு செலுத்தப்படுகின்றன.

அந்த வகையில் இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதில் கோவேக்சின் தடுப்பு மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ளது. 

இதற்கிடையே 2 கோடி கோவேக்சின் தடுப்பு மருந்தை பிரேசில் நாடு ஆர்டர் கொடுத்து இருந்தது. ஆனால் திடீரென்று கோவேக்சின் தடுப்பூசியை இறக்குமதி செய்ய பிரேசில் சுகாதாரத்துறை தடை விதித்துள்ளது. இந்த தடுப்பூசிகள் பாதுகாப்பான முறையில் உற்பத்தி செய்யப்படுகிறதா என்பதை நிரூபிக்க உரிய ஆவணம் சமர்ப்பிக்கப்படவில்லை என்று கூறி தடை விதிக்கப்படுவதாக தகவல் வெளியாகி இருந்தது.

இது குறித்து பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம் அளித்தது. பிரேசில் சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டிய தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்வோம். இதற்கான காலக்கெடு குறித்து பிரேசிலுடன் ஆலோசித்து வருகிறோம். இந்த விவகாரம் விரைவில் சுமூகமாக தீர்க்கப்படும் என்று அறிவித்துள்ளது. கோவேக்சின் தடுப்பூசியை பாரத் பயோடெக் நிறுவனம் இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story